பூந்தமல்லி: பூந்தமல்லி சுற்று பகுதிகளில், டாஸ்மாக் கடை இரவில் மூடிய பின், மது கூடங்களில் கள்ளச்சந்தை மது விற்பனை அமோகமாக நடக்கிறது. 'குடி' மகன்களை கவர 'சைடு டிஷ்' இலவசமாக வழங்கப்படுகிறது.பூந்தமல்லி நகரத்தைச் சுற்றி பூந்தமல்லி மற்றும் நசரத்பேட்டை காவல் எல்லையில், 15 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இங்கு, அரசு அனுமதியுடன் மது கூடங்களும் அமைந்துள்ளன.டாஸ்மாக் கடை, பகல் 12:00 மணிக்கு திறந்து இரவு 10:00 மணிக்கு மூடப்படுகிறது. இரவு, கடை மூடிய பின், மறுநாள் பகலில் கடை திறக்கும் வரை டாஸ்மாக் கடையையொட்டி உள்ள மது கூடங்களில், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன.டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் மது பாட்டில், கூடுதலாக 100 ரூபாய் வைத்து, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ''குடி'' மகன்களை கவர டம்ளர், குடிநீர், உறுகாய், சிப்ஸ், வெள்ளரி துண்டு, தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா உள்ளிட்ட பழத்துண்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.சில மது கூடங்களில், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி கறி, வாத்து கறி இலவசமாக வழங்கப்படுகிறது.போலீஸ், அதிகாரிகளின் தொந்தரவும் இல்லை. கூடுதல் விலைக்கு மது வாங்கினாலும், இலவசமாக சைடு டிஷ் கிடைப்பதால், இங்கு ''குடி''மகன்கள் வருகையும், விற்பனையும் அமோகமாக நடக்கிறது.