உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மஹா கும்பமேளாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர்!

மஹா கும்பமேளாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், தினமும் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள், புனித நீராட வருகை தருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கின்றன. இந்த இடத்தில், ஆண்டுதோறும் 'மகாமேளா' புனித நீராடுதல் நடக்கிறது. உத்தரப்பிரதேச மாநில மக்கள், இங்கு வந்து புனித நீராடிவிட்டு செல்வர்.இந்த ஆண்டு நிகழ்வானது, 12 பூரண கும்ப மேளாவுக்கு பிறகு, அதாவது, 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மஹா கும்பமேளா ஆகும். திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.நாடு முழுதும் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளா துவங்கியதில் இருந்து, நேற்று வரை, 11.47 கோடி பேர், புனித நீராடி உள்ளனர். நேற்று, குடியரசு தினம் மற்றும் பொது விடுமுறை என்பதால், நேற்று மட்டும், ஒரே நாளில், 1.17 கோடி பேர் புனித நீராடினர். உத்தரப்பிரதேச அரசு தினமும், எதிர்பார்த்ததை விட, 15 முதல், 20 சதவீதம் மக்கள் கூடுதலாக வருகின்றனர். இதனால், மஹாகும்பமேளா நடக்கும் பிரயாக் ராஜில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளே காணப்படுகின்றன. புனித நீராட 45 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13 நாட்களிலேயே, 25.48 சதவீதம், அதாவது 11. 47 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.வரும், 29ம் தேதி, மவுனி அமாவாசை என்பதால், அன்று மட்டும், ஒரே நாளில், 10 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புனித நீராடும் மக்களின் உயிர், உடைமைகள் போன்றவற்றுக்கு, உத்தரப்பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. மொத்தம், 60,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து, பிரயாக்ராஜ் கூடுதல் போலீல் கமிஷனர் கொளஞ்சி கூறியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மஹா கும்பமேளாவில் புனித நீராட, மக்கள் வந்தபடி உள்ளனர். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., படை தவிர மற்ற அனைத்து பிரிவினரும், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, பிரயாக்ராஜ் எல்லையில் துவங்கி புனித நீராடும் இடங்கள் வரை, 24 மணி நேரமும், பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன. சிறு பிரச்னை ஏற்பட்டாலும், அடுத்த நிமிடமே, அந்த இடத்துக்கு பாதுகாப்பு படையினர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தியாகு
ஜன 27, 2025 10:34

இந்துக்களிடம் இருக்கும் இதே ஒற்றுமை தமிழ்நாட்டிலும் இருந்தால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியையே டுமிழ்நாட்டில் இருந்து காணாமல் செய்துவிடலாம்.


vivek
ஜன 27, 2025 09:00

எந்த கோவில்ல சிதறு தேங்காய் உடைசலும் அதை எடுக்க முதல் ஆள வந்துடவாரு


அப்பாவி
ஜன 27, 2025 08:01

எத்தனை பேருக்கு என்ன கஷ்டமோ? குரு பகவான் எல்லாருக்கும் நல்லது பண்ணட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை