புதுச்சேரி: ''புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு காங்., தான் தலைமை தாங்குகிறது. விரும்பினால், தி.மு.க., தனித்து நிற்கட்டும்,'' என, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.புதுச்சேரியில் ஆறு முறை ஆட்சியில் இருந்த காங்., கட்சி, 2021 தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அக்கட்சி இரு தொகுதியில் மட்டுமே வெற்றிப்பெற்றது. 6 தொகுதி
அதே நேரத்தில் கூட்டணியில் இருந்த தி.மு.க., ஆறு தொகுதிகளை கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் இரு கட்சிகளிடையே உரசல் நிலவி வருகிறது.இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் அரசை எதிர்ப்பதில் தனித்தனியே போராட்டங்களை நடத்தி வருகின்றன. அத்துடன் கூட்டணி பற்றி கவலைப்படாமல், வரும் தேர்தலில் இரு கட்சிகளும் 30 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில், வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தல் பணிகளை துவங்கி விட்டன.ஓடாத வண்டியில் ஏற மாட்டோம் என விமர்சித்த தி.மு.க., இப்போது மக்களுடன் தான் கூட்டணி என்று ஒரே போடாக போட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.'புதுச்சேரி என்றைக்குமே காங்., கோட்டை தான். 30 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். கூட்டணி என்றால் காங்., 20 தொகுதிகளில் நிற்க வேண்டும். தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 10 சீட்டுகளை கொடுத்துவிடுவோம். அவர்கள் பிரித்து நிற்கட்டும்' என்று கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இது தொடர்பாக காங்., மூத்த தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம், புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகின்றனர் என, நேற்று கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறியதாவது:தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., தான் இண்டி கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. புதுச்சேரியில் காங்., தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். மதுபான தொழிற்சாலை
தனித்து நிற்பது தி.மு.க.,வின் விருப்பம். அதில் நாங்கள் ஏதும் கருத்து கூற முடியாது. அவர்கள் தனித்து நிற்பதாக கூறினால், எங்களுடன் கூட்டணிக்கு வாங்க என்று நாங்கள் பேசவா முடியும். அவர்கள் தனித்து நிற்பதாக இருந்தால் நிற்கட்டும். நாங்கள் வேண்டாமென்றா சொல்கிறோம். இப்போது, 30 தொகுதிகளிலும் கட்சி பணியாற்றி வருகிறது. மக்களுக்கான போராட்டங்களை நடத்துகிறோம். தினமும் கூட்டணி என்று ஏதும் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அப்போது எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளன என, தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டணிக்கு தலைமை தாங்குவது மட்டுமின்றி கொள்கை ரீதியாக காங்., - தி.மு.க., உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது. புதிய மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., கட்சிகள் உரக்க குரல் எழுப்பி உள்ளன. ஆனால், சட்டசபையில் புதிய மதுபான தொழிற்சாலை அனுமதியை முதல்வர் ரங்கசாமி அறிவிக்கும்போது தி.மு.க., வாய் திறக்கவில்லை. புதிய மதுபான தொழிற்சாலைக்கு எதிராக சட்டசபைக்கு வெளியிலும் தி.மு.க., இதுவரை எதுவும் சொல்லவில்லை. இதனால் புதுச்சேரி இண்டி கூட்டணியில் கொள்கை ரீதியாகவும் உரசல் ஏற்பட்டுள்ளது.