சமீப காலமாக பங்கு சந்தையில் கூடுதல் லாபம், பார்ட் டைம், கே.ஒய்.சி., புதுப்பிப்பு என கூறி மக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. மக்களின் அறியாமை, பேராசையை பயன்படுத்தி விதவிதமாக தங்கள் வலையில் மோசடிக்கும்பல், இவர்களை வீழ்த்துகிறது; பணத்தை பறிக்கின்றன. 'சைபர்' மோசடியில் இருந்து தப்பிக்க போலீசார் அன்றாடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை கூட தெரியாமல் சிக்கி கொள்கின்றனர். திருப்பூரில் இவ்வகை மோசடிகளில் ஏமாறுவோர் அதிகரித்து வருகின்றனர்.ஓட்டல், உணவு, மேப் ரிவ்யூ போன்றவற்றுக்கு 'ரேட்டிங்' கொடுத்து, பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம். அதிக 'டாஸ்க்'குகளை முடிப்பவர்களுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்ற வகையில் மக்களை நம்ப வைக்கின்றனர். சாமானியர் முதல் மெத்த படித்தவர் வரைமோசடி கும்பல்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மோசடி கும்பல்களிடம் சாதாரண மக்களை காட்டிலும், மெத்த படித்தவர்கள், உயர் பணிகளில் உள்ளவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என பலர், பேராசையால் ஆண்டுக்கணக்கில் தாங்கள் சேமித்த பணத்தை இழக்கின்றனர்.சமீப காலமாக, போலீஸ் அபராதம் விதித்தது போன்று குறுந்தகவல் அனுப்பியும், தபால் வந்தது போன்றும், கே.ஒய்.சி., அப்டேட், கடன் செயலி மூலம் லோன் என்றும் புதுப்புது டெக்னிக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.விழிப்புணர்வு ஏற்படுத்தியும்...மக்களை நேரடியாக அணுகி, பொருளாதார கஷ்டங்களைத் தெரிந்துகொண்டு, கடன் பெற தாங்கள் தேர்வாகி உள்ளீர்கள், மொபைல் போன், 'லேப்-டாப்' போன்றவற்றை எளிதாக வாங்கி தருகிறோம் என அறியாமையை பயன்படுத்தி அவர்களது மொபைல் போனை பயன்படுத்தி, அவர்களது வங்கிக்கணக்கில் இருந்தே பணத்தை சுருட்டிவிடுகின்றனர். குறிப்பாக, கடன் செயலிகள் வாயிலாக கடன் பெற்று, பொதுமக்களின் வங்கிக்கணக்குக்கு வரவு வைக்கப்படும் பணத்தை, தங்கள் கணக்குக்கு மாற்றிவிடுகின்றனர்.விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் இன்னமும் மாறாமல் ஏமாந்து வருவது போலீசாருக்கு அதிர்ச்சியாக உள்ளது.
பணம் மீட்பதில் சிக்கல்
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சைபர் மோசடிகளில் சிக்கி பலரும் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுக்கின்றனர். இன்னமும் வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பக்கூடிய மக்கள் இருந்து கொண்டுதான் உள்ளனர். எவ்வித முதலீடு இல்லாமல், லாபம் வருவது, வீட்டில் இருந்து கூடுதல் கமிஷன் சம்பாதிக்கலாம் என்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் புகார் அதிகரித்துள்ளது. புதுப்புது வகையில் ஏமாறும் புகார்கள் வாரத்துக்கு, ஒன்றிரண்டு வந்து விடுகிறது.மோசடி கும்பல்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயங்குகின்றன. மக்களிடம் இருந்து எடுக்கப்படும் பணம், நாலைந்து வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு வெளியில் சென்று விடுகிறது. புகாரை அறிந்து விசாரிக்கும் போது, பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. எக்காரணத்தை கொண்டும் வங்கி கணக்கு விபரங்கள், மொபைல்போனுக்கு வரக்கூடிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்யவோ, திட்டங்களில் இணையவோ வேண்டாம். குறுந்தகவல் தொடர்பாக சந்தேகம் இருந்தால் சைபர் கிரைம் போலீசாரை அணுகி சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
எஸ்.ஐ., மகனுக்கு தொடர்பு
திருப்பூரில் மோசடி கும்பல்களுக்கு வங்கி கணக்கு விபரங்களை சிலர் வாங்கி கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கண்காணித்தனர். அதில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவரின் மகன், மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. பல்வேறு மோசடிகளில் ஏமாற்றி மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் போது, பயன்படுத்த வங்கி கணக்கு விபரங்களை வாங்கி கொடுத்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கும்பல்களிடம் பணத்தை பெற்று கொண்டு, தெரிந்த நபர்களிடம் பொய்யான காரணங்களை கூறி, ஐந்துக்கும் மேற்பட்டோரிடம் வங்கி கணக்கு விவரத்தை பெற்று வந்தது தெரிந்தது.