த.வெ.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்: விஜய்க்கு பயந்து ஆளுங்கட்சி ரகசிய உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'அரசையும், தி.மு.க., நிர்வாகிகளையும் விமர்சித்து பேசும் த.வெ.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, போலீசாருக்கு அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்கள், கரூர் உயிர் பலி சம்பவ விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், பழையபடி வெளியே வர துவங்கி உள்ளனர். கடந்த 5ல், மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பேசிய த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவம் தொடர்பாக அரசை கடுமையாக விமர்சித்தார். 'கருர் உயிர் பலி சம்பவத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ், கரூர் மாவட்ட தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி ஆகியோர் தான் காரணம் என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்; செந்தில் பாலாஜியை கரூர் ரவுடி பையன் எனவும் ஒருமையில் விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலம் சரியில்லை; எழுதிக் கொடுத்தால், அதை மட்டும் படிப்பார் எனவும் கூறினார். இதையடுத்து, ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதியப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீதும், ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீதும், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பொதுக் குழுவில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று அறிவித்த பின், அ.தி.மு.க.,வோடு த.வெ.க.,வுக்கு கூட்டணி அமைய வாய்ப் பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் விஜயை டென்ஷனாக்கி, அவரை அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடக் கூடாது என தி.மு.க., தலைமை நினைக்கிறது. அதனாலேயே, அக்கட்சியினர் மீது நடவடிக்கை எதுவும் இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.