சவுதி அரேபியாவுக்கு ஐந்தாண்டாக நேரடி விமான சேவை இல்லை: அழுத்தம் தராமல் திமுக அரசு மவுனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் சவுதி அரேபியா நாட்டுக்கு, ஒரு நேரடி விமான சேவை கூட இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. இந்த விஷயத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தி.மு.க., அரசு அழுத்தம் தராமல் மவுனம் காத்து வருகிறது.தொழில், கல்வி, சுற்றுலா, முதலீடு என பல்வேறு காரணங்களுக்காக, சர்வதேச பயணியர், லட்சக்கணக்கில் தமிழகம் வந்து செல்கின்றனர். வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மெக்கா, மதீனா நகரங்கள், முஸ்லிம்கள் புனிதப்பயணம் மேற்கொள்ளும் முக்கியமான இடங்கள். அத்துடன் அங்குள்ள ரியாத், தமாம் நகரங்களும் மிகவும் புகழ் வாய்ந்தவை.தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில், மூன்றாவதாக சவுதி அரேபியா உள்ளது. இங்கு மட்டும், 3.52 லட்சம் தமிழர்கள் வசிப்பதாக, அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்துக்கு முன் வரை, சென்னையில் இருந்து ரியாத், ஜெட்டா நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை இருந்தது. இதனால், பயணியர் சிரமமின்றி சென்று திரும்பினர்.கொரோனாவுக்கு பின், ரியாத், ஜெட்டா நகரங்களுக்கு நேரடி விமான சேவை இல்லாத நிலை, கடந்த ஐந்தாண்டுகளாக நீடிக்கிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தமாம் நகரை இணைக்கும் வகையில், ஒரு நேரடி விமான சேவை, சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.அவ்வப்போது பெயரளவிற்கு, 'இண்டிகோ'வும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் விமானங்களை இயக்கி வந்தன. தற்போது, அந்த சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி தமிழகத்தில் இருந்து, சவுதி அரேபியாவுக்கு நேரடி விமான சேவை கிடையாது.தமிழகத்துக்கு மற்ற விவகாரங்களில் பிரச்னை வந்தால் கொதித்து எழும் தி.மு.க., அரசு, விமான போக்குவரத்து விவகாரங்களில் தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், சவுதி அரேபியாவுக்கு நேரடி விமான சேவை இல்லாதது பற்றி, மத்திய அரசு மற்றும் விமான நிறுவனங்களுக்கு, எந்த அழுத்தமும் தமிழக அரசு தரவில்லை.இதனால், வேலைக்காக அங்கு வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப, அதிக கட்டணம் செலவிடும் நிலையும், நேரடி விமானம் இல்லாத நிலையும் உள்ளது. இனியாவது, தமிழக அரசு வாய் திறந்து அழுத்தம் தர வேண்டும் என்கின்றனர், 'ஏவியேஷன்' வல்லுநர்கள்.அவர்கள் கூறியதாவது:ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்களில் இருந்து, சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை உள்ளது. ஆனால், தமிழகத்தில் அப்படி கிடையாது. மற்ற விமான நிலையங்களுக்கு சென்று, மாற வேண்டிய கட்டாய நிலையில் தான், கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் இருக்கிறோம்.இதனால், பயண நேரமும் அதிகரிக்கிறது; செலவும் கூடுதலாகிறது. ஹஜ், உம்ரா புனித யாத்திரை செல்வோர், நேரடி சேவையின்றி பாதிக்கப்படுகின்றனர். பழையபடி நேரடி விமானங்களை, சென்னையில் இருந்து இயக்கினால், விமான கட்டணம் குறைவதோடு, சிரமமும் குறையும்.ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஹஜ் பயணத்திற்கு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்கிறது. அதில், எல்லோரும் செல்ல முடியாது. பயணியருக்கு தேவை உள்ள இடத்திற்கு விமானங்களை இயக்குங்கள் என, தமிழகம் போராட வேண்டியிருக்கிறது.இந்த விஷயத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகம் என்றாலும், சரியான நேரத்தில், தமிழக அரசு அழுத்தம் கொடுத்தால், விமான நிறுவனங்களும் விமானங்களை இயக்க முன்வரும். ஆயினும், இவ்விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.ஏற்கனவே நம்மிடமிருந்த பல சர்வதேச விமான சேவைகள் பறிக்கப்பட்டு, அண்டை மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு சென்று விட்டன. இதுபற்றி, பார்லிமென்ட்டில் எம்.பி.,க்களும் வாய் திறக்கவில்லை.சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு இருந்த நேரடி சேவையையும் பறி கொடுத்துள்ளோம். இவ்விஷயத்தில், தமிழக அரசு இனியாவது முயற்சித்து, சவுதி அரேபியாவுக்கு நேரடி விமான சேவையை ஏற்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். எட்டாத உயரத்தில் கட்டணம்!சவுதியின் ஜெட்டா நகரில், எட்டு ஆண்டுகளாக தனியார், 'டிராக்டர்' கம்பெனியில் வேலை செய்கிறேன். ஓராண்டு இடைவெளியில் சொந்த ஊரான திருச்சி வருவேன். என்னுடன் கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நினைத்த நேரத்தில் விமான பயணம் வாயிலாக செல்ல முடிகிறது.தமிழர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. அதனாலேயே, விமான கட்டணம் எட்டாத உயரத்தில் உள்ளது. இப்படி, அதிக கட்டணத்தில் ஊருக்குச் செல்வதை விட, பணி செய்யும் இடத்திலேயே இருந்து விடலாம் என தோன்றுகிறது. நேரடி விமான சேவையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.- பழனியப்பன்,சவுதியில் பணிபுரியும் தமிழர் பேச்சு நடத்தினால் தீர்வு கிடைக்கும்!இந்தியா - சவுதி அரேபியா இடையேயான, 'பாஷா' எனும் விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட வராந்திர இருக்கைகள் எண்ணிக்கை 50,000 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், 20,000 இருக்கைகள் காலியாக உள்ளன.ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில் சென்னை இருந்தும், விமான நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து சவுதிக்கு விமானங்களை இயக்க முன்வரவில்லை. விமான நிறுவனங்கள் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தினால், இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் என, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.- நமது நிருபர் -