நாட்டின் அணுசக்தி துறையில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை உறுதி செய்வதற்கு, 'ஷாந்தி' என்ற பெயரில் மசோதாவை அறிமுகம் செய்திருக்கிறது அரசு. அணுசக்தி என்றாலே அது அழிவுக்கானது என்ற அச்ச உணர்வை தணிப்பதற்கு, அமைதி என்ற பொருள்படக்கூடிய ஷாந்தி மசோதா உதவுமா என பார்க்க வேண்டும்.தவறிய வாய்ப்புகள்
மத்திய அரசு, 2025 டிசம்பர் 15 அன்று 'இந்திய நிலைத்த மற்றும் மேம்பட்ட, மாற்றத்துக்கான அணுசக்தி' எனப்படும் 'ஷாந்தி' மசோதாவை பார்லிமென்டில் அறிமுகப்படுத்தியது. இது வெறும் ஒரு சட்ட நடவடிக்கை அல்ல; அணுசக்தி பற்றிய தயக்க நிலையிலிருந்து பொறுப்பான நிர்வாக நிலைக்கு நம் நாடு நகரும் தீர்மானமான அடையாளமாக, இந்த மசோதா பார்க்கப்படுகிறது.சுதந்திரத்துக்கு பின் மிக விரைவிலேயே, நம் நாட்டின் நவீன, தன்னிறைவு நாடு என்ற கனவின் ஒரு முக்கிய அங்கமாக அணுசக்தி மாறியது. 1948ம் ஆண்டு, டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா தலைமையில், அணு ஆற்றல் ஆணையம் நிறுவப்பட்டது.இந்தியாவின் தோரியம் வளங்களை பயன்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அவரது மூன்று கட்ட அணுசக்தி திட்டம், நீண்டகால உத்தியுடன் கூடிய சிந்தனையும், அரசியல் பொறுமையும் தேவை என உணர்த்தியது. ஆனால், 1960களுக்கு பின் வந்த ஆட்சிகள், அந்த உத்தியை தொடர தவறி விட்டன. கடந்த 1966ல், டாக்டர் ஹோமி பாபாவின் திடீர் மரணம், இந்தியாவின் அணுசக்தி கனவிற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த 1974ல் நடந்த 'புத்தர் சிரித்தார்' அணு சோதனை வரலாற்று சிறப்புடையதாக இருந்தாலும், சிவில் அணுசக்தி வளர்ச்சி பல பத்தாண்டுகளுக்கு கட் டுப் பாட்டிலேயே இருந்தது. அணுசக்தியை, அடிப்படை மின்சார உட்கட்டமைப்பாக ஏற்றுக்கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் முன்னேற்றம் மிக மெதுவாகவே இருந்தது.விதிவிலக்கு நாடு
கடந்த 2010ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த 'அணு சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம்' இந்த துறைக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது. விபத்து ஏற்பட்டால், உபகரணங்களை வழங்குபவர்களுக்கும் பொறுப்பு என அறிவிக்கப்பட்டதால், உலகளவில் இந்தியா ஒரு விதிவிலக்கான நாடாக மாறியது.இதன் விளைவாக, இந்தியா - அமெரிக்கா சிவில் அணு ஒப்பந்தம் 2008க்கு பிறகும், 'வெஸ்டிங்ஹவுஸ், அரேவா' போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட மறுத்தன. இதனால், இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு, 3 சதவீதத்திற்கும் குறைவாகவே நீடித்தது.அணுசக்தியை பயன்படுத்தும் பெரும்பாலான நாடுகளில், இது உணர்ச்சி பிரச்னையாக அல்ல; உத்தி அடிப்படையிலான அவசியமாகவே பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம், ஆற்றல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் உடல் வரம்புகள் ஆகியவை இன்று இரண்டாம் அணு மறுமலர்ச்சிக்கு காரணமாக உள்ளன.அணுசக்தி ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கு சுமார் 12 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியிடுகிறது. இது காற்றாலை, சூரிய ஆற்றலுக்கு நிகரானது. அதே நேரத்தில், இடைமறிக்கும் தன்மை கொண்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மட்டும் மேம்பட்ட பொருளாதாரங் களை தாங்கி விட முடியாது.முக்கிய அம்சங்கள்
'ஆற்றல் பாதுகாப்பே தேசிய பாதுகாப்பு' என்ற அடிப்படை உண்மையை, ஷாந்தி சட்டம் முன் மொழிகிறது. அணுசக்தியை ஒரு பாரம்பரிய ஆபத்தாக அல்ல; முக்கிய உள்கட்டமைப்பாக மத்திய அரசு பார்க்கிறது.கடந்த, 1962க்கு பின், முதன்முறையாக, அணுமின் உற்பத்தியில் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்.பி.சி.ஐ.எல்., என்ற அரசு நிறுவனம் பல பத்தாண்டுகளாக ஒரே நிறுவனமாக இருந்தது. இது அரசியல் எச்சரிக்கையை மட்டும் திருப்திப்படுத்தியது; வேகத்தையும் அளவையும் அளிக்கவில்லை.ஆனால், அணுசக்தி பிரிவில், ஷாந்தி சட்டம் ஒரு கலப்பு மாடலை அறிமுகப்படுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கலாம்; ஆனால், எரிபொருள் செறிவூட்டல், மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்ற முக்கிய துறைகளில், அரசு கட்டுப்பாடு தொடரும்.இது முழுமையான தனியார்மயமாக்கல் அல்ல; மாறாக, கட்டுப்பாட்டுடன் கூடிய பங்கேற்பு நடவடிக்கை. இதன் வாயிலாக, போட்டியும் மூலதனமும் தேவையான அளவில் இணைக்கப்படுகிறது.பொறுப்பு தொடர்பாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. இயக்குபவர்களின் பொறுப்பு வரம்பு நிர்ணயம், அரசின் இழப்பீட்டு உத்தரவாதம், உபகரண வழங்குநர்களின் பொறுப்பு வரையறை ஆகியவை உலக தரநிலைகளுடன் நம் நாட்டை ஒத்துப்போக செய்கின்றன.அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதும் ஒரு முக்கிய சீர்திருத்தம். வரும் 2047ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணுசக்தி இலக்கை அடைய, அடுத்த இருபது ஆண்டுகளில் 90 ஜிகா வாட் திறன் சேர்க்க வேண்டும்.இதற்கு 450 - 630 பில்லியன் டாலர், அதாவது, 40 லட்சம் கோடி ரூபாய் முதல் 56.75 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு தேவை. இதை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் மட்டும் சாதிக்க முடியாது என்பதை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.ஆற்றல் பாதுகாப்பு
அணுசக்தி என்பது மின் உற்பத்தி மட்டுமல்ல; குடிநீர், ஹைட்ரஜன், தொழில் துறை சீரமைப்பு போன்ற பல துறைகளுக்கும் உதவக்கூடியதாக உள்ளது. கல்பாக்கத்தில் செயல்படும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு சிறந்த உதாரணம்.இந்தியா தனது கச்சா எண்ணெயின் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இது வெளிநாட்டு அரசியல் பதற்றங்களுக்கு நம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்கொள்ளவும் பாதிக்கவும் செய்கிறது. அணுசக்தி என்பது இந்த சார்பை குறைக்கும்.நீண்ட காலமாக, இந்தியா அணுசக்தியை ஒரு சுமையாகவே பார்த்தது. 'ஷாந்தி' சட்டம் அதை இறையாண்மை, வளர்ச்சி மற்றும் காலநிலை தலைமையின் ஒரு சொத்தாக மாற்றுகிறது. செயல்படுத்தல் சரியாக நடந்தால், 2047க்குள் 100 ஜிகா வாட் என்ற இலக்கு இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு, காலநிலை நம்பகத்தன்மை மற்றும் புவியியல் அரசியல் அந்தஸ்துக்கு அடித்தளமாக அமையும்.
அதிகரிக்கும் அணுசக்தி
* உலக மின்சார உற்பத்தியின் சுமார் 10 சதவீதத்தை, 30க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்கள் வழங்குகின்றன* பாகிஸ்தான் தனது மின்சார உற்பத்தியில் 16.70 சதவீதத்தை அணுசக்தியில் இருந்து பெறுகிறது* பிரான்ஸ் 65 சதவீதத்தை அணுசக்தியில் இருந்து பெறுகிறது.