உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பணி நிரந்தரம் கோரி மூன்றாவது நாளாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி மூன்றாவது நாளாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம்

சென்னை: பணி நிரந்தம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, மூன்றாவது நாளாக நேற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.சம ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிரந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உண்ணா விரத போராட்டம் நடந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்ததால், போலீசார் அவர்களை கைது செய்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விட்டனர்.ஆனால், செவிலியர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அதில், உடன்பாடு எட்டப்படவில்லை; போராட்டம் தொடர்ந்தது. சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுதும் பல்வேறு அரசு மருத்துவமனை செவிலியர்களும் போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில், கிளாம்பாக்கத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டு, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு ஊரப்பாக்கத்தில் இருந்து வந்த செவிலியர்கள், மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பல்வேறு மாவட்டங்களிலும், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது: நாங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக, அமைச்சர் கூறுவது தவறான செய்தி. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். நாளை பேச்சு நடத்த அழைப்பு விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா தான் காரணம்; அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. அவர்கள் கோரிக்கையில், இரண்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்றொரு கோரிக்கை, ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது, காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நர்ஸ் பணியிடங்களில், 169 காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை துவங்கி உள்ளது. ஆனால், ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களையும் நிரப்ப, செவிலியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் எனும் நடைமுறை, கடந்த 2014 - 15ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன், நிரந்தர பணியாளர்கள்தான் இருந்தனர். ஒப்பந்த பணியாளர்கள் எனும் நடைமுறையை கொண்டு வந்ததே ஜெயலலிதா தான். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க., கண்டனம்

அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஒப்பந்த பணியாளர்கள் விவகாரத்தில் உண்மையை மறைத்து, மறைந்த ஜெயலலிதா மீது பழி சுமத்துவது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல். கடந்த, 2012ல் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, எம்.ஆர்.பி., எனும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தை, இந்தியாவிலேயே முன்மாதிரியாக தோற்றுவித்தவர் ஜெயலலிதா. ​தேர்தல் நேரத்தில், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், நான்காண்டு காலம் கடந்தும், அவர்களை நடுத்தெருவில் போராட வைத்திருப்பதுதான், தி.மு.க., அரசின் சாதனை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.செவிலியர் சாபம் அரியணை ஏறவிடாது சுயலநலமற்ற சேவை புரியும் செவிலியர்களின் சாபம், தி.மு.க., அரசை இனி அரியணை ஏற விடாது. தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி, சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விடுவது, மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலைக்கழிக்கும் தி.மு.க., அரசின் அராஜக போக்கை கண்டிக்கிறேன். - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்18,000 ரூபாய் மட்டுமே மாத ஊதியம் அரசு மருத்துவ துறையில், 17,000 பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13,000 பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில், 18,000 ரூபாய் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுகிறது; இது அநீதி. அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் தேவை இருப்பதால், ஒப்பந்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடும் செவிலியர்களை அழைத்து பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு முன்வர வேண்டும். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும், கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என, செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். -பிரேமலதா, தே.மு.தி.க., பொதுச்செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சோலை பார்த்தி
டிச 21, 2025 21:45

நான்கறை ஆண்டுகள். . என்ன செய்தீர்கள்... நிரந்தரம் னு அறிவிப்பு வரும்... ஆனால் நிரந்தரமா னு அடுத்த ஆட்சியாளர்கள் தான் சொல்லனும்


சந்திரன்
டிச 21, 2025 14:57

ஓட்டு போடும்போது செவிலியரா போடுங்க அறிவிலிகளா போட்டா இந்த கதி தான்


ஜெகதீசன்
டிச 21, 2025 13:16

சிஸ்டர்ஸ்.... ஓட்டு போடும் போது மறந்து விடாதீங்க.


தேவி
டிச 21, 2025 08:05

அடுத்த தேர்தலிலும் கையாலாகாத திமுக அரசு வென்றால் 17 ஆயிரம் நிரந்தர செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையில் மாற்ற படுவார்கள்.


சமீபத்திய செய்தி