அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 80 கோடி ரூபாயை நன்கொடையாக பெற வேண்டும் என, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 'அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்' என, முதல்வரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் பேசி வருகின்றனர். அதேநேரம், மழையில் ஒழுகும் கூரை, கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளி என, பல்வேறு அவலங்களையும் அரசு பள்ளிகள் சந்திக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6irieqjt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது. இருக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்டினால், அவர்கள் இடைநிற்கும் அவலமும் உள்ளது. அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய சவாலான நிலையில், தமிழக அரசு உள்ளது. இந்நிலையில், பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதியாக, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' எனும், நன்கொடை வசூலிக்கும் திட்டத்திற்கு, 80 கோடி ரூபாயை திரட்ட வேண்டும். அதை, நாளை மறுநாள் சேலத்தில் நடக்கும் பள்ளிக்கல்வி துறை கூட்டத்தில் வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை தமிழகம் முழுதும் உள்ள பெரு நிறுவனங்களிடம் இருந்து, 60 கோடி ரூபாய் வரை திரட்டுவதாக வாக்குறுதி அளித்துள்ள அதிகாரிகள், மேலும், 20 கோடியை திரட்ட வேண்டுமே என்ற நெருக்கடியில் உள்ளனர். மீண்டும் மீண்டும் கையேந்தணுமா? அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளம் என்கிறது அரசு. ஆனால், ஒவ்வொரு பள்ளிக்குமான தேவை நிறைய உள்ளதால், நன்கொடையாளர்களை தேடிச்சென்று மீண்டும் மீண்டும் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், இன்னும் இரண்டு நாட்களுக்குள், 80 கோடி ரூபாய் நிதியை திரட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளோம். - பள்ளி நிதி மேலாண்மை குழு இதுவரை ரூ.800 கோடி தமிழகத்தில், 37,558 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி போதாது என்பதால், அரசு, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் வாயிலாக, பெரு, சிறு மற்றும் குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரிடம் நிதி, பொருட்கள், தன்னார்வ சேவைகளை கேட்டுப் பெறுகிறது.இதற்காக, ஒவ்வொரு பள்ளியின் முகவரி, அதன் தேவை குறித்த விபரங்களை, https://nammaschool.tnschools.gov.inஎன்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், பெரு நிறுவனங்களுக்குச் சென்று, 'சிங்கிள் நோடல் அக்கவுன்ட்' எனும் முறையில் வங்கிக் கணக்கு துவங்கி, சமூக பங்களிப்பு நிதியாக பெறுகின்றனர். அந்த வகையில், கடந்த ஓராண்டில், 15,000 பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, 800 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. - நமது நிருபர் -