உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆபத்தான உணவு பட்டியலில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர்; கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த அறிவுரை

ஆபத்தான உணவு பட்டியலில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர்; கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த அறிவுரை

சென்னை: பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்தான உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக, கண்ணாடி பாட்டில் போன்ற பொருட்களை பயன்படுத்துமாறு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r4ywca6f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இறைச்சி, பால் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை, ஆபத்துக்கு அதிக வாய்ப்புள்ள உணவுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இவற்றுடன், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரையும், ஆபத்தான உணவு பட்டியலில் சேர்த்து, கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

உடல்நல பாதிப்பு

குறிப்பாக, வெவ்வேறு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், கண்ணுக்கு தெரியாத 2.40 லட்சம், 'மைக்ரோ' பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை, செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக சென்று, ரத்த ஓட்டத்தில் நுழைந்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பிளாஸ்டிக் துகள், மனித நுரையீரல், ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் கண்டறியப்பட்டுள்ளது.தீங்கு விளைவிக்கக்கூடிய இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில், துருப்பிடிக்காத, 'ஸ்டீல்' பாட்டில், மூங்கில் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த, உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், கோடைக் காலம் துவங்கி இருப்பதால், குடிநீரில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளன. எனவே, குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களில் உள்ள குடிநீரின் மாதிரிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

சில ஆய்வு முடிவுகளில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலில், பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு, காற்று மாசு, சுகாதாரமற்ற, 'வாட்டர் கேன்' உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பிளாஸ்டிக் துகள்களில், 90 சதவீதம் மிகவும் சிறிதான 'நானோ பிளாஸ்டிக்' என்பது கண்டறியப்பட்டது. எனவே தான், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், ஆபத்தான உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.தற்போதைய சூழலில், 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத குடிநீர் பாட்டில் பயன்பாட்டை கொண்டு வர முடியாது. ஆனால், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை தவிர்க்கும்படி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

உரிமம் ரத்தாகும்

மேலும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, 10, 20 ரூபாய் என்ற விலைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களில், மறுபடியும் தண்ணீர் பிடித்து அருந்த வேண்டாம். அதுதான், அதிகளவில் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதற்கான காரணியாக உள்ளது.கேன் குடிநீர் நிறுவனங்கள், பாசி படர்ந்த, கீறல்கள் உள்ள அல்லது பலமுறை பயன்படுத்தப்பட்ட, 20 லிட்டர் குடிநீர் கேன்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமங்களை, அந்தந்த மாநில உணவு பாதுகாப்பு துறை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கையை தாண்டி, மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

aaruthirumalai
மார் 25, 2025 13:08

ஐயா ஜனத்தொகை அதிகம் நிர்வாகம் குறைவு என்ன செய்ய முடியும். எப்பவாச்சும் நேர்மையானவர்கள் ஏதாவது செய்கிறார்கள்.


ஆரூர் ரங்
மார் 25, 2025 11:42

பிளாஸ்டிக் வரும்முன் 30-40 சதவீதத்துக்கும் மேல் உணவுப் பொருட்கள் மழை, வெயில், பூச்சித் தாக்குதல் காரணமாக அழுகி வீணாகிக் கொண்டிருந்தன. மாற்று பேக்கிங் பொருள் கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.


அப்பாவி
மார் 25, 2025 09:33

குடிநீர் மடுமா? ஹார்லிக்ஸ், காம்ப்ளான் முதல், ஐஸ்கிரீம், காப்பிபொடி, ஊறுகாய், புஸ்கெட், கடலை மிட்டாய், முருக்கு, மிக்சர், பால், தேன், பருப்பு, சாக்கலேட், பாமாயில்,நல்கெண்ணெய், கடலெண்ணெய் உப்பு, புளி, மிளகாய்னு இன்னும் எல்லாம். ப்ளாஸ்டிக்கில்தான் வருது. இவிங்க ஏதோ புதுசா கண்டு பிடிச்சு சொல்றாங்க. ஆனா, ப்ளாஸ்டிக்கை தடை செய்தால் இந்திய பொருளாதாரமே புட்டுக்கும்.


theruvasagan
மார் 25, 2025 18:24

தகுதியான மாற்று ஏற்பாடு ஒன்றை உருவாக்காமல் பிளாஸ்டிக்கை ஒதுக்குவது சவாலான விஷயம். உலகப் பொருளாதாரமே சரிந்து விடும். எப்படி பெட்ரோலியப் பொருள்களை முற்றும் தவிர்க்க முடியாதோ பிளாஸ்டிக்கும் அந்த வகையே.


SP
மார் 25, 2025 09:09

கண்டிப்பாக நடவடிக்கை அரசு எடுக்காது மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை