சென்னை: 'பா.ம.க., -- எம்.எல்.ஏ., அருள் நீக்கப்பட்டதை, சட்டசபை ஆவணங்களில் பதிவு செய்து உத்தரவிட வேண்டும்' என, சட்டசபை செயலர் சீனிவாசனிடம் அன்புமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தை, அக்கட்சி செய்தி தொடர்பாளர் பாலு சட்டசபை செயலரிடம் நேற்று வழங்கினார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், என் முன்னிலையில் நடந்தது. அதில், பா.ம.க., சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து, ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, என் தலைமையில் நடந்த பா.ம.க., அரசியல் தலைமை குழு கூட்டத்தில், பா.ம.க., சட்டசபை குழு புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவரை, பா.ம.க., கொறடாவாக செயல்பட்ட எம்.எல்.ஏ., அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கடந்த ஜூலை 2ம் தேதி நீக்கப்பட்டார். இது குறித்து, ஜூலை 3ம் தேதி, சபாநாயகருக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை, சட்டசபை ஆவணங்களில் பதிவு செய்து உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ம.க., - எம்.எல்.ஏ., என்ற பெயரில், அருள் பொதுவெளியில் செயல்படுவதால் வீண் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தாமதிக்காமல், அருள் நீக்கப்பட்டதை சட்டசபை ஆவணங்களில் பதிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழங்க கோரி மனு
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு, தலைமை செயலர் முருகானந்தத்திடம், எம்.எல்.ஏ., அருள் அளித்த மனு: பா.ம.க.,வை துவங்கிய டாக்டர் ராமதாஸ், கடந்த 46 ஆண்டுகளாக கட்சியை நடத்தி வருகிறார்; கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். பா.ம.க.,வில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், ராமதாஸ் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். அவருடைய பாதுகாப்பு கருதி, முழு நேரமும் ராமதாஸ் வசித்து வரும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கும், அவர் நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாசை சந்திக்க வருவோரை பரிசோதிக்க, நுழைவாயிலில், 'மெட்டல் டிடெக்டர்' அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.