சென்னையில் நேற்று முன்தினம், ஒரு மணி நேரத்தில் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையனை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.சென்னையில் நேற்று முன்தினம் காலை, 6:00 - 7:00 மணி வரை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, கிண்டி என, ஆறு இடங்களில், 50 வயதுக்கும் மேற்பட்ட ஆறு பெண்களிடம், 26 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள், மிசாமமஜாதுஷ்மேசம் ஈரானி, 23, ஜாபர் குலாம் உசேன் ஈரானி, 28, ம.பி.,யைச் சேர்ந்த, சல்மான் உசேன், 25, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களில், ஜாபர் குலாம் உசேன் ஈரானி என்பவர், சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, 2:30 மணியளவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இச்சம்பவம் குறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆகியோர் கூறியதாவது: சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த உடனேயே, ரோந்து பணி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். 56 இடங்களில் தீவிர வாகன சோதனை செய்யப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 'சிசிடிவி கேமரா'க்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட 'பஜாஜ் பல்சர்' இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், ஆறு இடங்களிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் சோதனை செய்யப்பட்டது. விமான நிலையத்தில் கடைசி நேரத்தில், 'போர்டிங் பாஸ்' வாங்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு, விமான நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கூறியிருந்தோம். அவர்கள், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் விமானத்திற்கு இரண்டு பேர், போர்டிங் பாஸ் கேட்டதாகவும், அதில் ஒருவர் விமானத்தில் ஏறி விட்டதாகவும் கூறினர். மற்றொருவரின் அடையாள அட்டை மீது சந்தேகம் இருப்பதால், அவர் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.உடனடியாக விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்டோர், அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நபர், செயின் பறிப்பில் ஈடுபட்டவரா என, விசாரித்தனர். விசாரணையில், அவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாபர் குலாம் உசேன் ஈரானி என்பது தெரியவந்தது; அவரை கைது செய்தோம். இவரது கூட்டாளி மிசாமமஜாதுஷ்மேசம் ஈரானி, விமானத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக விமானத்தை நிறுத்தினோம்.அவரை விமானத்திலிருந்து இறக்கி, தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். விமான நிலைய அதிகாரிகள், விமானத்திற்குள் சென்று பார்த்து, அவருக்கான இருக்கையில் யாரும் இல்லை என்றனர். உடனே, பக்கத்து இருக்கையில் அமர்ந்துள்ளாரா என்பதை பாருங்கள் என்றோம். பக்கத்து இருக்கையை பார்த்தபோது, அதில் செயின் பறிப்பு திருடன் அமர்ந்து இருந்தது தெரியவந்தது. அவரை கீழே இறங்குமாறு கூறியதும், மறுத்தார்.மற்ற பயணியருக்கு, ஸ்பீக்கர் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கோரசாக சத்தம் போடவே, மிசாமமஜாதுஷ்மேசம், வேறு வழியின்றி இறங்கினார். விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன், அவரையும் கைது செய்தோம். செயின் பறிப்பில் ஈடுபட, விமானம் வாயிலாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கும், மற்றொரு நபர், காலை, 4:30 மணிக்கும் சென்னை வந்துள்ளனர். சம்பவத்தன்று, இவர்களின் கூட்டாளியான, ம.பி.,யைச் சேர்ந்த சல்மான் உசேன், விமான நிலையம் வெளியே காத்திருந்துள்ளார்.மூவரும், 'கால் டாக்சி' வாயிலாக, ஒரு இடத்திற்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில், சல்மான் உசேன் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓட்டி வந்த பைக்கை, ஜாபர் குலாம் உசேன், மிசாமமஜாதுஷ்மேசம் ஈரானி ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இவர்கள் இருவர் தான் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின், சல்மான் உசேனிடம், இரு சக்கர வாகனத்தையும், 27 சவரன் நகையும் ஒப்படைத்துள்ளனர். பின், இருவரும் கால் டாக்சி வாயிலாக, விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். சல்மான் உசேன், இரு சக்கர வாகனத்தை, தரமணி ரயில் நிலையம் அருகே நிறுத்திவிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.அங்கிருந்து, பினாக்கினி எக்ஸ்பிரசில் ஏறி தப்பிச் செல்வது தெரியவந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன், ஓங்கோல் பகுதியில், ஓடும் ரயிலில் கழிப்பறையில் பதுங்கி இருந்த சல்மான் உசேனை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறோம்.என்கவுன்டர்
செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு சக்கர வாகனம் மற்றும் நகையை பறிமுதல் செய்ய, ஜாபர் குலாம் உசேனை, தரமணி ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, 2:30 மணியளவில், திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முகமது புகாரி உள்ளிட்ட போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர், நகைகளை எடுத்து தருவது போல, இரு சக்கர வாகனத்தில் மறைத்த வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி, இரண்டு முறை சுட்டார். அதிர்ஷ்டவசமாக குண்டுகள், போலீசாரின் வாகனத்தின் மீது பட்டது.அப்போது, இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தற்காப்புக்காக சுட்டதில், நெஞ்சில் குண்டு பாய்ந்து, ஜாபர் குலாம் உசேன் சுருண்டு விழுந்தார். ஜாபர் குலாம் உசேன், ஈரானிய கொள்ளை கூட்டத்தின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்துள்ளார். இவர்களின் கொள்ளை கூட்டத்தில், 20 பேர் உள்ளனர். ஜாபர் குலாம் உசேன் மீது, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொள்ளையரிடம் இருந்து, 26.5 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம்.சென்னையில், கடந்தாண்டு, 34 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில், 33 சம்பவங்களை கண்டுபிடித்து விட்டோம். இந்த ஆண்டில், 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஈடுபட்டவர்களை கைது செய்து விட்டோம். அவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நான்காவது 'என்கவுன்டர்'
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்று, ஒன்பது மாதங்கள் ஆகின்றன. அவர் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, புழல் பகுதியில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின், வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, தென் சென்னை ரவுடி சீசிங் ராஜா ஆகியோரும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர். தற்போது, நான்காவது என்கவுன்டரில், செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையர் ஜாபர் குலாம் உசேனும் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.
மின்னல் வேகத்தில் இயங்கும் ஈரானிய கொள்ளையர்
ஈரானிய கொள்ளையர்களின் பூர்வீகம் ஈரான். அங்கிருந்து அகதிகளாக, 1970 களில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் அம்புவேலி, ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்துார், மணப்பாறை, கர்நாடக மாநிலம் பீதர் உள்ளிட்ட இடங்களில் குடியேறினர். இவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள். வெள்ளை நிறத்தில், வாட்டசாட்டமான உடல்வாகுடன் இருப்பர். இவர்களின் பிரதான தொழிலே நகை, பணத்தை கொள்ளையடிப்பது தான். ஒரு இடத்தில் கொள்ளை, நகை பறிப்பில் ஈடுபட்டதும், மின்னல் வேகத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு பறந்து விடுவர்.கடந்த, 2018ல், சென்னையில் இரண்டு நாட்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு, 104 சவரனை பறித்தனர். தோற்றத்தில் போலீஸ் போல இருப்பதால், தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள், போலீஸ், ராணுவ வீரர்கள் போல நடித்து, மூதாட்டிகளை குறிவைத்து, கொள்ளை அடிப்பர்.
பல மொழிகள் தெரியும்
தமிழ், ஹிந்தி, மராத்தி என, பல மொழிகளில் சரளமாக பேசுவர். விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடிப்பர். ஒரு இடத்திற்கு ஒரு முறை வந்தால் போதும், குறைந்தபட்சம், 10ல் இருந்து, 30 இடங்களிலாவது கொள்ளையில் ஈடுபடுவர். வங்கிகள் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மாற்றும் இடங்களிலும் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பர்.இவர்களை கைது செய்ய, இவர்கள் வசிக்கும் ஊருக்குச் சென்றால், போலீசாரை பெண்கள் சூழ்ந்து கொள்வர். கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை சுற்றி, ஆடைகள் இன்றி அரண் போல நின்று, போலீசாரை நெருங்க விடாமல் தடுப்பர் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் தான் இவர்
கடந்தாண்டு, வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்தவர் முகமது புகாரி. அப்போது, இரவு பணியில் இருந்தபோது, சாலை ஓரமாக குளிர் தாங்க முடியாமல் படுத்திருந்த, 30 பேருக்கு போர்வை அணிவித்தார்.இந்த காட்சி, சமூக வலைதளத்தில் பரவியதால் முகமது புகாரியின் மனிதநேயம் பாராட்டப்பட்டது. அதே ஆண்டில், புழல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது தான், ஜூலையில், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்பவர், முகமது புகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையரான ஜாபர் குலாம் உசேனையும், முகமது புகாரி தான், 'என்கவுன்டர்' செய்துள்ளார். - நமது நிருபர் குழு -