மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேச இருப்பதால், இரு கட்சிகளின் இடையே ஏற்பட்ட உரசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.கடந்த டிச., 24ம் தேதி ஈ.வெ.ரா., நினைவு நாளில், அவரது சிலைக்கு மாலை அணிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன், 'தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தொடர்கின்றன' என குற்றம்சாட்டினார்.அதைத் தொடர்ந்து, 'அடுத்த கல்வியாண்டில், 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை, தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தேசிய கல்வி கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சி' என, விமர்சித்திருந்தார்.இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, நேற்று விழுப்புரத்தில் துவங்கியது; நாளை முடிகிறது. அதில், அக்கட்சியின் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பங்கேற்றுள்ளார். மாநாடு முடித்து சென்னை வரும் அவர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.இதுகுறித்து, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க., அரசு மீது நியாயமான விமர்சனங்களை வைக்கிறோம். இது கூட்டணிக்கு எதிரானது அல்ல. எந்த உரசலும் இல்லை; புகைச்சலும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் தொடருவோம். தி.மு.க., கூட்டணி ஜனநாயக ரீதியில் செயல்படும் கூட்டணி. அதனால், இங்கிருப்போர் மக்களுக்கான நல்ல விஷயங்களை எடுத்துப் பேசுவர். அதற்கு எங்கும் தடையில்லை. தி.மு.க., அரசு, பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறது. அதே நேரம், ஒரு சில நேரங்களில் மக்கள் படும் துன்பங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.அப்படிப்பட்ட பிரச்னைகளில், எங்களுடைய கருத்தைச் சொல்லி, அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். கம்யூனிஸ்ட்கள் நியாயமான விமர்சனம் வைக்கும்போது, தி.மு.க., தரப்பில் மன வருத்தம் ஏற்படுவதாக அறிகிறோம். இந்நிலையில், பிரகாஷ் காரத் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர்.அச்சந்திப்பின் போது, வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்பது குறித்து பேசுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -