உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக முதல்வருக்கும், அமைச்சர் நேருவுக்கும் தேர்தல் வாக்குறுதி புத்தகம் அனுப்பும் போராட்டம்

தமிழக முதல்வருக்கும், அமைச்சர் நேருவுக்கும் தேர்தல் வாக்குறுதி புத்தகம் அனுப்பும் போராட்டம்

கோவை : உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக, தமிழக முதல்வருக்கும், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சருக்கும், 2021ல் தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி புத்தகத்தின் நகல் அனுப்பும் போராட்டத்தை, கோவை மாவட்ட நகர உள்ளாட்சி ஓட்டுநர், துாய்மை, டி.பி.சி., அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

கடும் அதிருப்தி

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்யக்கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், துாய்மை பணியாளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில், '10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணிபுரிய நேரிட்டால், கூடுதல் பணி நேர சம்பளம் வழங்கப்படும்.'பணியில் இருக்கும்போது துாய்மை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவருடைய வாரிசுதாரர்களுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்' என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு கள ஆய்வுக்கு வந்திருந்தார். அச்சமயத்தில், பணி நிரந்தரம் சம்பந்தமாக, துாய்மை பணியாளர்கள் அவரிடம் முறையிட்டனர். 'கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என சொன்னார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. அதேநேரம், 'இனி துாய்மை பணியாளர் என்கிற அரசு பணியிடமே இருக்காது; கருணை அடிப்படையில் வாரிசு நியமனமும் இல்லை' என்கிற அரசாணை வெளியிடப்பட்டது. இது, துாய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பேசும்போது, 'அவுட் சோர்சிங் முறையில் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். 213 பேர் தொழில்முனைவோராக மாற்றப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் துாய்மை பணியாளர்களை கடும் கோபம் அடைய வைத்துள்ளது.

உத்தரவு

இதையடுத்து, கடந்த 2021ல் தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி நகல்களை, முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் நேருவுக்கும் அனுப்பும் போராட்டத்தை, கோவை மாவட்ட நகர உள்ளாட்சி ஓட்டுநர், துாய்மை, டி.பி.சி., அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.இச்சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில், ''துாய்மை பணியாளர் என்கிற பணியிடத்தை முழுமையாக நீக்கியுள்ளது தமிழக அரசு. தேர்தல் வாக்குறுதியில் சொல்லி, மீண்டும் மீண்டும் உறுதி அளித்த விஷயத்துக்கு மாறாக அரசு தரப்பு உத்தரவு போட்டுள்ளது.''அதனால், அதை எதிர்த்து, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி புத்தக நகலை, வரும் 8ம் தேதி முதல்வருக்கும், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவுக்கும் அனுப்பி வைக்க உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

xyzabc
ஏப் 11, 2025 11:02

அவசியம் அனுப்பப்பட வேண்டும்.


அபிஷேக்குமார்
ஏப் 04, 2025 11:16

பாஞ்சிலட்சம், ரண்டு கோடி வேலை, அல்லாருக்கும் வூடு வாக்குறுதிகளை யாருக்கு அனுப்புறது?


ramesh
ஏப் 04, 2025 06:37

அனுப்பிடலாம் படிக்கத் தெரியாதே என்ன பண்ண?


முக்கிய வீடியோ