பட்டா மாறுதலை கண்காணிக்க தரக்கட்டுப்பாட்டு மையம் துவக்கம்
சென்னை : இணையவழி பட்டா மாறுதல், நில அளவை பணிகளை கண்காணிக்க, சென்னை சேப்பாக்கம் நிலவரி திட்ட அலுவலகத்தில், தரக்கட்டுபாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல், நில எல்லைகளை அளவீடு செய்யும் பணிகள், இணைய வழியில் மேற்கொள்ளப்படுகின்றன. நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை கூர்ந்து கண்காணித்து தரத்தை உறுதி செய்ய, தரக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் நிலவரி திட்டம் மற்றும் நில அளவை துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, நேற்று நடந்த நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். வருவாய் துறை செயலர் அமுதா, நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, நில அளவை துறை இயக்குநர் நீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்னென்ன பயன்கள்? * இ - சேவை மையங்கள் வாயிலாக பெறப்படும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இந்த மையத்தால் கண்காணிக்கப்படும் * பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது, அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையும் கண்காணிக்கப்படும் * நில அளவை கோரும் விண்ணப்பங்கள் மீது எத்தனை நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது என்பதும் கண்காணிக்கப்படும் * பட்டா மாறுதல் கோரி தாக்கலாகும் விண்ணப்பங்கள் குறித்த புள்ளிவிபரங்கள், 'டேஷ் போர்டு' எனப்படும், நிகழ்நேர விபர பட்டியலில் காட்சிப்படுத்தப்படும் * இந்த விபரங்கள், உயர் அதிகாரிகளின் நேரடி பார்வைக்கு உடனுக்குடன் வருவதால், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதை தடுக்க முடியும். ***