உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தஞ்சையை விட்டு விலகவில்லை ராஜேந்திர சோழன்

தஞ்சையை விட்டு விலகவில்லை ராஜேந்திர சோழன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''ராஜேந்திர சோழன் தஞ்சையை கைவிட்டு, கங்கை கொண்ட சோழபுரத்துக்கு சென்றதாக சிலர் கூறுகின்றனர். அதில் உண்மை இல்லை,'' என, தொல்லியல் அறிஞர் ஸ்ரீதரன் பேசினார்.தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக்கழகத்தில், 'தொல்லியல் காப்பியம்: தமிழக அகழாய்வுகளின் கதை' என்ற தலைப்பில், இரண்டு நாள் பேச்சரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

அகழாய்வு

அதில், தமிழக தொல்லியல் துறை, முன்னாள் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், 'கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வின் கதை' என்ற தலைப்பில் பேசியதாவது:கடந்த, 1980 - 81ம் ஆண்டுகளில், நான், துளசிராமன், செல்வராஜ் ஆகிய மூவரும், மாணவர்கள், அலுவலர்களுடன் இணைந்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு செய்தோம். அப்போது, கங்கைகொண்ட சோழபுரம் கோவில், புதர்களால் மறைந்திருந்தது. நாங்கள் மாளிகைமேடு என்ற இடத்தில் அகழாய்வு செய்து, அரண்மனையின் கீழ் தளத்துக்கான சுவர் பகுதிகளை கண்டறிந்தோம். அப்போதைய கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அங்கு வந்து பார்வையிட்டனர். ராஜராஜனுக்கு பின், ராஜேந்திரன் தஞ்சையை கைவிட்டதாக கூறுகின்றனர். அதில் உண்மை இல்லை. ராஜேந்திர சோழன் காலத்தில் தஞ்சையில் வயல்கள் அதிகம் இருந்ததால், படையை பெருக்க இடவசதி குறைவாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, 10 ஆண்டுகளுக்கு பின், அவர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றினார்.

சூரிய வழிபாடு

அதையும், கங்கை படையெடுப்பின் வெற்றி நகரமாக நிர்மாணித்தார்.சாளுக்கியம், ஒடிஷா உள்ளிட்ட நாடுகளை கடந்து, வங்காளத்தை வெற்றிகொண்டதன் அடையாளமாக, அங்கெல்லாம் கிடைத்த ரதி மன்மதன், நந்தி மீது நடனமாடும் சிவன், சூரிய வழிபாடு உள்ளிட்ட சிற்பங்களை எடுத்து வந்து, சோழநாட்டு கோவில்களில் வழிபாட்டுக்கு வைத்தார்.கங்கை நீரை, சோழகங்கம் எனும் ஏரியில் கொட்டி, அதை வற்றாத வகையில் மாற்றினார். சோழர்கள் முடிசூட்டும் சிதம்பரம் கோவில், இரண்டாம் தலைநகரங்களான பழையாறை, திருமழபாடி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்டவை அருகருகே இருந்ததாலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் படைகளை நிறுத்த, மிகப்பெரிய இடம் இருந்ததும், அது அமைதியாக இருந்ததாலும், தலைநகரை மாற்றினார்.அதன் அருகில் மிகப்பெரிய அரண்மனையையும், கோவிலையும் கட்டினார். அந்த அரண்மனையில் இருந்துதான், சோழ மன்னர்கள், 250 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அந்த கோவில், அடியில் சதுரம், பின் எட்டுபட்டை, மேலே வட்டம் எனும், லிங்க வடிவில் அமைக்கப்பட்டது. அங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகானவை.

அருங்காட்சியகம்

நாங்கள் அகழாய்வு செய்தபின், மத்திய தொல்லியல் துறை, அக்கோவிலை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக்கி, நன்றாக பராமரிக்கிறது.விரைவில் அங்கு அமைய உள்ள சோழர் அருங்காட்சியகம், ராஜேந்திரன் உள்ளிட்ட சோழ மன்னர்களின் வரலாற்றையும், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் கூறும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கிஜன்
டிச 17, 2024 03:38

அந்த காலத்துலயே சிலைகளை கடத்தியிருக்காங்க ..... நாம இப்போ சிலைகளை மீட்கிறது மாதிரி.... சாளுக்கியம், ஒடிஷா, வங்கதேசத்திலிருந்து கிடைத்த ரதி மன்மதன், நந்தி மீது நடனமாடும் சிவன், சூரிய வழிபாடு உள்ளிட்ட சிற்பங்களை எப்போ திரும்ப கொடுக்கப்போறோம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை