டில்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், ராஜ்யசபா எம்.பி.,யாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=417048qo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 48ல் வென்று பா.ஜ., ஆட்சியை பிடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடில்லி தொகுதியில் தோல்வி அடைந்தார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்விஅடைந்தனர்.இதனால் கட்சி கலகலத்துள்ளது. தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியில் பிளவுகள் ஏற்படாமல் தடுக்கவும், தன் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் காக்கவும், கெஜ்ரிவால் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.மதுபான மோசடி வழக்கு உட்பட பல வழக்குகளை சந்தித்து வரும் நிலையில், அவரது ஆட்சியில் நடந்த சில முறைகேடுகள் தொடர்பான, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கைகளை, புதிய ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய பா.ஜ., திட்டமிட்டுள்ளது.இது, அரசியல் ரீதியில் கெஜ்ரிவாலுக்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும். இந்த வகையில், ஏதாவது ஒரு பதவியில் இருந்தால், நிலைமையை சமாளிக்க முடியும் என்பது அவரது திட்டம். இதற்காக, ராஜ்யசபா எம்.பி.,யாவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆம் ஆத்மிக்கு தற்போது டில்லியில் மூன்று, பஞ்சாபில் ஏழு என, 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். டில்லி எம்.பி.,க்களின் பதவிக்காலம் 2030லும், பஞ்சாப் எம்.பி.,க்களின் பதவிக்காலம் 2028லும் முடிவுக்கு வருகின்றன.பஞ்சாப் சட்டசபையில் மொத்தமுள்ள 117 இடங்களில், ஆம் ஆத்மிக்கு 92 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதனால், பஞ்சாபில் இருந்து ராஜ்யசபாவுக்கு செல்வது தான் பாதுகாப்பானதாக இருக்கும். இதற்காக யாராவது ஒரு எம்.பி.,யை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் வென்று ராஜ்யசபாவுக்குள் நுழைய கெஜ்ரிவால் ஆலோசித்து வருகிறார். - நமது சிறப்பு நிருபர் -