சென்னை: ''அன்புமணி தன் பெயருக்கு பின்னால், என் பெயரை பயன்படுத்தக் கூடாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.தஞ்சை,- திருவாரூர் மாவட்ட பா.ம.க., வன்னியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், கும்பகோணத்தில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:நான், 5 வயது குழந்தை போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அந்த குழந்தை தான், மூன்று ஆண்டுகளுக்கு முன், அன்புமணியை தலைவராக்கியது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. என் பேச்சை கேட்காதவர்கள் யாரும், இனி என் பெயரை போடக்கூடாது; வேண்டுமானால் இன்ஷியல் மட்டும் போட்டுக் கொள்ளலாம். அதற்கு மட்டுமே அனுமதி உண்டு.தசரத சக்கரவரத்தி தன் மகன் ராமனுக்கு, 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என ஆணையிடுகிறார். அப்போதும், 'அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல்' ராமனின் முகம் இருந்ததாம். ஆனால், நான் செயல் தலைவராக இருங்கள் என்கிறேன்; ஊர் ஊராகச் சென்று, மக்களை சந்திக்க வேண்டும் என்கிறேன். அதை செய்ய மறுப்பவர்கள், தலைவர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி, பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு, அனைவரும் வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கடந்த ஜூன் 22ம் தேதி, சென்னை சோழிங்கநல்லுாரில் நடந்த பா.ம.க., சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அன்புமணி, 'மகனாகவும், டாக்டராகவும் சொல்கிறேன். வயது முதிர்வால், ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்' என்றார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, கும்பகோணத்தில் ராமதாஸ் பேசியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அன்புமணிக்கு போட்டியாக காந்திமதி!
கும்பகோணம் பொதுக்குழுவுக்கு, காரில் புறப்பட்ட ராமதாசிடம், 'பா.ம.க., மாநில செயற்குழுவில் பங்கேற்ற மகள் ஸ்ரீ காந்திமதிக்கு, கட்சியில் பதவி வழங்கப் போகிறீர்களா?' என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், 'தற்சமயம் இல்லை; போக போகத்தான் தெரியும்' என பாட்டு பாடி தெரிவித்தார். மகன் அன்புமணிக்கு போட்டியாக, மகள் ஸ்ரீ காந்திமதியை களமிறக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். அதனால் தான், மகளுக்கு கட்சி பதவி வழங்குவது குறித்து பூடகமாக பேசியுள்ளார் என, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.