உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு

ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்துக்கும் ராமேஸ்வரம் கோயிலுக்குமான தொடர்பு சிருங்கேரி சாரதா பீடம் நிறுவப் பெற்ற முதல் நாளிலிருந்தே தொடங்குகிறது.கி.பி., 788-820ல் வாழ்ந்த ஆதிசங்கரர், நாட்டின் நான்கு ஆம்னாய பீடங்களை முறையே தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம், பத்ரிநாத், கிழக்கில் கோவர்த்தன பீடம், புரி ஆகியவற்றை நிறுவினார்.சீடர்கள் அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர், தோடகர் ஆகியோரை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஷ்மீரத்தில் சர்வக்ஞ பீடம் ஏறி, தமது 32வது வயதில் கேதாரத்தில் இறைவனோடு கலந்தார்.

1200 ஆண்டு தொடர்பு

சிருங்கேரி சாரதா பீடத்திற்கு ராமேஸ்வரத்தை க்ஷேத்ரம் ஆக ஏற்படுத்தியுள்ளார் என்பது 1200 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் சிருங்கேரி சாரதா பீடத்துடன் உள்ள நீடித்த தொடர்பை உணர்த்துகிறது. இதை உறுதி செய்யும் விதமாக பல வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் சிருங்கேரியில் உள்ள பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ வித்யாரண்யர் கோயிலில் சிற்பங்கள் உள்ளன.கோயிலின் கிழக்கு மதிலுடன் இணைந்தே சிருங்கேரி மடத்தின் கிளை இயங்கி வரும் கட்டடம் இருந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்ஸவத்தின் போது கோயிலில் இருந்து குடை மற்றும் பல்லக்கு மரியாதைகள் செய்யப்படுவது கடைபிடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று.

விஜய யாத்திரை

ஸ்ரீ சிருங்கேரி மடத்தில் பீடாதிபதியாக விளங்கி வந்துள்ள ஜகத்குருக்கள் எப்போது தமிழகத்தில் விஜய யாத்திரை செய்தாலும், ராமேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளனர். அன்றைய சேதுபதி மன்னர், அரசு முழுவதையுமே ஜகத்குருவிடம் பாத காணிக்கையாக சமர்ப்பணம் செய்தார். தம்மிடம் அளிக்கப்பட அரசை ஜகத்குரு மீண்டும் சேதுபதி இளவரசரிடமே கொடுத்து அவருக்கு பட்டமளித்து சென்றார். கோயிலின் தெற்கு கோபுரம் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் திருப்பணியாக கட்டித் தரப்பட்டுள்ளது. பர்வத வர்த்தினியம்மன் சன்னதியின் கருங்கல் முன் மண்டபமும் இதன் திருப்பணியே ஆகும்.

பூஜை செய்யும் உரிமை

ஸ்ரீ ராம நாத சுவாமி மூலவருக்கு கருவறையில் சென்று பூஜை செய்யும் உரிமை சிருங்கேரி சுவாமிகளிடம் தீக்ஷை பெற்று இக்கோவிலில் பணிபுரியும் மராட்டிய பிராமணர்கள், சிருங்கேரி சுவாமிகள் மற்றும் நேபாள மன்னர்களுக்கு மட்டுமே உண்டு; கோயிலில் கருவறையில் பூஜை செய்வதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் வாழும் மராத்திய அந்தண இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு வழிபாடுகள் செய்யும் உரிமை உள்ளவர்கள்.இரண்டாவதாக இவர்கள் சிருங்கேரி ஜகத்குருவிடம் மந்திர உபதேசம், சிவதீக்ஷை பெற்ற பின்புதான் இக்கோயிலில் குருக்களாக நியமிக்கப்படுகின்றனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

DURGA PRASAD
ஜூலை 07, 2025 20:04

ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை ப்ரதிஹஷ்டை செய்து பூஜை செய்தார். கோயில் கட்டியதாக ராமாயணம் கூறவில்லை. பிறகுதான் இந்த இடம் ராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது.


Bhaskaran
ஜூலை 07, 2025 15:35

காஞ்சிபுரம் சங்கரர் மடம் ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்படவில்லை


Sivagiri
ஜூலை 07, 2025 14:43

இதிலென்ன அதிசயம்?


ஆரூர் ரங்
ஜூலை 07, 2025 09:32

மராத்தி மொழி உருவாவதற்கு முன்பே இக் கோவில் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் இந்த ஆலயம், ஸ்தல புராணம் தொடர்பாக ஏதுமில்லை என்கிறார்கள்.


Kalyanaraman
ஜூலை 07, 2025 08:47

புதுத் தகவல்களுக்கு நன்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை