ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அம்போ; அரசாணையை மதிக்காத பதிவுத்துறை
சென்னை: 'தமிழகத்தில், விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள அலுவலகங்களை திறக்க வேண்டும்' என்ற அரசாணையை பதிவுத்துறை புறக்கணித்ததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 585 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்வம்
இதில், முகூர்த்த நாட்களில் பத்திரங்களை பதிய மக்கள் ஆர்வம் காட்டுவதால், அந்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்கிறது. அத்துடன், 'ஆடிப்பெருக்கு, தைப்பூசம், தமிழ் புத்தாண்டு போன்ற நாட்களில், சார் - பதிவாளர்கள் அலுவலகம் திறக்கப்பட்டு பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்' என, தமிழக அரசு 2021ல் அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப் பட்டது. இதை பின்பற்றி, ஒவ்வொரு விசேஷ நாளிலும், பத்திரப்பதிவு நடப்பதை பதிவுத்துறை உறுதி செய்யும். அந்த வரிசையில், 'ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க அனுமதிக்க வேண்டும்' என, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால், அதற்கு மாறாக, 'ஆடிப்பெருக்கு நாளில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படாது' என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூறியதாவது:
பொதுவாக ஆடி மாதத்தில், இயல்பான நாட்களில் பத்திரப்பதிவு குறைந்தாலும், ஆடிப்பெருக்கு நாளில், பத்திரம் பதிய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அலட்சியம்
இந்நாளில் அலுவலகங்கள் செயல்பட்டு இருந்தால், குறைந்தபட்சம் 10,000 பத்திரங்களாவது பதிவாகி இருக்கும். ஒரு பத்திரத்துக்கு குறைந்தபட்சம், 5,000 ரூபாய் என்றாலும், 5 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால், இந்த வருவாயை பெற முடியாமல் போனது. பொதுமக்களுக்கும் பத்திரப்பதிவு நடக்காதது, ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு நடத்துவது குறித்து, மேலதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால், நேற்று அலுவலகங்களை திறக்க வில்லை' என்றார்.