அடங்க மறு - வன்முறையை துாண்டுவது அல்ல: தொண்டர்களுக்கு திருமா புதிய விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''முறைத்து பார்த்ததால் வெறும் நான்கு தட்டு தட்டினர்; ஒழுங்காக கூட அடிக்கவில்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடந்த வி.சி., கூட்டத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: ஒரு கட்சித் தலைவர், அவரின் காரின் முன் சென்று, ஒருவர் பைக்கை நிறுத்துகிறார். அவரின் பாதுகாப்பு தொடர்பாக எவனும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி சென்று தடுக்கவில்லை என கேட்கின்றனர். பழனிசாமி முன் ஒருவர் பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவரா? ஒரு நிமிடம் கூட இல்லை; என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவன் வந்து நின்று முறைத்தான். யாராக இருந்தால் என்ன என்று கேட்டான். அவர்களிடம் முறைத்ததால் அடித்தனர். அவன் என்ன ஜாதி, மதம் என்று கூட தெரியாது. 'ஓரமா நில்லுங்க' என்று போலீசார் சொல்கின்றனர்; அவர்களிடமும் முறைக்கிறான். முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினான். 'அவ்வளவு திமிராடா உனக்கு; ஆணவமாடா உனக்கு' என்றுதான் அடித்தனர். வெறும் நான்கு அடிதான்; ஒழுங்காகக் கூட அடிக்கவில்லை. உடனே அவர் மயக்கம் போட்டு, நெஞ்சு வலிக்கிறது என்று நாடகமாடுகிறான்; எதற்காக இந்த நாடகமெல்லாம்? போலீசாரிடம், 'அவன் தெரியாமல் செய்து விட்டான்; நீங்கள் ஏதும் தண்டிக்க வேண்டாம் விட்டு விடுங்கள்' என, நான் கூறி விட்டு சென்றேன். கட்சியினரையும் அமைதிப்படுத்தினேன். உடனே, 'திருமாவளவன் தான் அடிக்க சொன்னாரு' என்கின்றனர். 'அடங்க மறு' என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த இடத்திலும் வன்முறையை துாண்டவில்லை. அடங்க மறு என்பது, ஒரு அரசியல் வார்த்தை. இவ்வாறு அவர் பேசினார். என் கார் மோதியதாக நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயார்: திருமா நேற்று, திருமாவளவன் அளித்த பேட்டி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது, எங்கள் கார் மோதவில்லை. வந்தவர் வீம்புக்காக நின்றார். அந்நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், எங்கள் கட்சியை சேர்ந்தவருக்கு சொந்தமானது. அந்த வண்டியை, 12:30 மணிக்கு ஒரு இடத்திற்கு போக வேண்டும் எனக் கேட்டு வாங்கியுள்ளார். அப்போது செல்லாமல், நான் நிகழ்ச்சி முடித்துவிட்டு செல்லும்போது குறுக்கே போகிறார். அவர் போகும்போது முன்னே எந்த வாகனமும் செல்லவில்லை. நினைத்திருந்தால் அவர் வேகமாக சென்றிருக்கலாம். இடது பக்கம் கூட சென்றிருக்கலாம். ஆனால், நான் வந்த வாகனத்தைப் பாார்த்துவிட்டு, அதன்பின் செல்கிறார். ஏதோ ஒரு கட்சி கொடியுடன் கார் வருகிறது என்றுகூட தள்ளி நின்று இருக்கலாம். ஆனால், வண்டி மோதாதபோது, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, எந்த புலனாய்வு அறிக்கை பெற்றார்; யார் அவருக்கு உறுதிப்படுத்தியது. வி.சி., கட்சியினரை, குண்டர்கள் என்கிறார். நடந்த சம்பவத்தை வைத்து வீடியோ வெளியிட்டவர்களுக்கும், அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இல்லாத, பொல்லாத கட்டுக்கதைகளை பேசுவதும், முந்திரிக் கொட்டையாக கற்பனையாக பேசுவதும் அண்ணாமலைக்கு வாடிக்கை. சமூக பதட்டத்தை உருவாக்கவே, அவர் குறியாக இருக்கிறார். நான் போராட்டம் நடத்திய இடத்தில் தான் செய்தியாளர்கள் இருந்தனர். என் காருக்கு முன் யாரும் இல்லை. ஆனால், முன்கூட்டியே ஒருவரை, 'செட்' செய்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ உடனடியாக அண்ணாமலைக்கு சென்றுள்ளது. இதற்கு பின்னால் பா.ஜ., உள்ளது. முதலில் இதை சாதாரணமாக நினைத்தேன். ஆனால், நடந்த விஷயம் என்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. இதுகுறித்து முதல்வரை சந்தித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த உள்ளேன். என்னுடைய காருக்கு முன் வந்த அந்நபர் யார் என்று எனக்கு தெரியாது. எனது வண்டி, அவர் மீது மோதியது என்று நிரூபித்தால், அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன், பொது இடத்திலும் நான் மன்னிப்பு கேட்க தயார். வண்டி மோதாதபோதே, மோதியதாக கூறி, ஜாதிய பதற்றத்தை அண்ணாமலை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார். ***