சென்னை : தமிழகத்தில் பாலியல், இனப்பெருக்கம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இளம் வயதில் கர்ப்பம்அடைவது அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. அதேநேரம், இளம் வயதில் கர்ப்பம் அடைதல் அதிகரித்து காணப்படுகிறது.கடந்த 2019 - 20ல், 11,772 ஆக இருந்த இளம் வயது கர்ப்பம், 2023 - 24ம் ஆண்டில், 14,360 ஆக உயர்ந்துள்ளது என, பொது சுகாதாரத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இளம் வயதில் கர்ப்பமாவது, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு கருத்தரித்த தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில், 1.5சதவீதம் இளம்வயது கர்ப்பம்.நாகை, தேனி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், கணிசமான அளவு, இளம் வயது கர்ப்பமடைதல் அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளி இடைநிற்றல், பாலியல், இனப்பெருக்கம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததே பிரதான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இளம் வயதில் பெண்கள் கர்ப்பம் அடைவதை, தி.மு.க., அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.அதன் விபரம்:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
இளம் வயது திருமணம்,பாலியல் வன்முறை, பெண்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவை, இளம் வயது கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.இளம் வயது கர்ப்பம், சுகாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு, தாய்மார்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது.பெண்ணின் திருமண வயது, குறைந்தபட்சம் 18 என்ற நிலையில், 14,360 இளம் பெண்கள் கருத்தரித்து இருக்கின்றனர். இதனால், சட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளம் வயது கர்ப்பத்தை தடுக்க வேண்டும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத்:
இளம் வயதில் கர்ப்பமடைதல் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.குழந்தை திருமணங்கள், பாலியல் குற்றங்கள், பள்ளி இடைநிற்றல் அதிகரிப்பு, வறுமை, பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்வது, போலி டாக்டர்களிடம் சென்று கருகலைப்பு செய்வது, அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இதற்கான காரணங்களை ஆராய்ந்து, இளம் வயது கர்ப்பமடைதலை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.