உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  கர்நாடகா வனப்பகுதியில் ரூ.400 கோடி கொள்ளை?

 கர்நாடகா வனப்பகுதியில் ரூ.400 கோடி கொள்ளை?

கர்நாடகா வனப்பகுதி சாலையில், 2025 அக்டோபர் 16ம் தேதி, இரண்டு கன்டெய்னர் லாரிகளுடன், 400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தற்போது அம்பலமாகி உள்ளது. கோவாவின் சாங்குலிம் என்ற இடத்தில் துவங்கும் சோர்லா காட் வனப்பகுதி சாலை, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகா ஜம்போட்டி வரை, 57 கி.மீ., துாரம் செல்கிறது. மிகவும் குறுகலாக இருக்கும் இந்த சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. கோவா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களையும் இந்த சாலை இணைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர், 16ம் தேதி, கோவாவில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு, சோர்லா காட் சாலை வழியாக, இரண்டு கன்டெய்னர் லாரிகள் சென்றன. ஆனால், அந்த லாரிகள் மஹாராஷ்டிராவுக்கு செல்லவே இல்லை. இதுபற்றி யாரும் போலீசில் புகார் அளிக்கவும் இல்லை.

கடத்தல்

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்த தொழில் அதிபர் சந்தீப் பாட்டீல் என்பவர், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், 'மஹாராஷ்டிராவை சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் கிஷோர் சேத், கோவா, மும்பையில் நிறைய முதலீடுகள் செய்து உள்ளார். 'இவருக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய், கோவாவில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர், 16ல், இரண்டு கன்டெய்னர் லாரிகளில் எடுத்து வரப்பட்டது. 'சோர்லா காட்டில் லாரிகள் வந்த போது, மர்ம நபர்கள் வழிமறித்து டிரைவர்களை தாக்கி, லாரிகளுடன் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். 'இந்த கொள்ளையில் எனக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து, கிஷோரின் ஆட்கள் என்னை கடத்தி, ஒரு மாதம் சிறை வைத்து தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி வந்துள்ளேன்' என்று பேசியிருந்தார். சந்தீப் பாட்டீல் புகாரின்படி நாசிக் போலீசார், நேற்று முன்தினம் ஆறு பேரை கைது செய்தனர். கொள்ளை போனதாக கூறப்படும், 400 கோடி ரூபாயும் செல்லாத 500 ரூபாய் நோட்டு கட்டுகள் என்றும், இந்த பணத்தை மாற்ற எடுத்து சென்றதாகவும்; கொள்ளை போனது, 400 முதல் 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும், தகவல்கள் வெளியாகின. இதனால், உண்மையை வெளிக்கொண்டு வர, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவின் தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி ஆதித்யா மிர்லேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வாக்காளர்களுக்கா?

இதுகுறித்து, பெலகாவி எஸ்.பி., ராமராஜன் நேற்று கூறுகையில், ''சோர்லா காட்டில், 400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி, கடந்த 6ம் தேதி நாசிக் எஸ்.பி.,யிடம் இருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. கொள்ளை போனது செல்லாத 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் கடிதத்தில் கூறி இருந்தனர். ''அவர்கள் நம் உதவியை கேட்டதால், கானாபுரா எஸ்.ஐ., தலைமையில் ஒரு குழுவை, மஹாராஷ்டிரா அனுப்பி வைத்தோம். ''சந்தீப் பாட்டீலிடம், நமது குழுவும் விசாரித்து தகவல் பெற்று உள்ளது. மஹாராஷ்டிரா போலீசார் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்போம்,'' என்றார். கன்டெய்னர் லாரிகளுடன் சேர்த்து, 400 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுவது கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பணம் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் தெரியவில்லை. மஹாராஷ்டிராவில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தது. வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்து செல்லப்பட்டதா என்றும் கேள்வி எழுந்து உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ