உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ரூ.4,000 டிக்கெட் ரூ.25,000க்கு விற்பனை; ஸ்ரீரங்கத்தை அதிர வைத்த மோசடி

 ரூ.4,000 டிக்கெட் ரூ.25,000க்கு விற்பனை; ஸ்ரீரங்கத்தை அதிர வைத்த மோசடி

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பின்போது, வி.ஐ.பி., பக்தர்களை குறிவைத்து, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் பக்தியை பணமாக்கும் முயற்சியில், பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், சொர்க்கவாசல் திறப்பின்போது, பல மடங்கு கூடுதல் பணத்திற்கு கள்ளச்சந்தையில் நுழைவு டிக்கெட், விற்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் ராம் குமார், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றதாக புகார் எழுந்துள்ளது. சொர்க்கவாசல் திறப்பு டிக்கெட் கட்டணம், 4,000 மற்றும் 700 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ராம்குமார் பெருமளவு டிக்கெட்டுகளை, அறநிலையத் துறையிடம் பெற்று, அதிக விலைக்கு விற்றுள்ளார். சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் பகலில், 700 ரூபாய் டிக்கெட் 2,000 ரூபாய்க்கும் 4,000 ரூபாய் டிக்கெட் 8,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. அன்று இரவு 700 ரூபாய் டிக்கெட், 5,000 ரூபாய்க்கும், 4,000 ரூபாய் டிக்கெட், 25,000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டன. தி.மு.க., பிரமுகர் ராம்குமார், அறநிலையத்துறை அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தி, டிக்கெட் விற்பனை செய்துள்ளார். இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் சீனிவாசன், கலெக்டருக்கு புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டுகள் போன்றே, போலி டிக்கெட்டுகளும் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடந்தது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் அளித்து, விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
ஜன 01, 2026 21:52

இங்கே ரயில்ல தத்கால் டிக்கெட்னு அதிகவிலைக்கு வெச்சு ஒரு கும்பல் கொள்ளையடிக்கலியா, அதே மாதிரிதான் எல்லா இடத்திலும் ஆரம்பிச்சுட்டாங்க. காசு இருக்கிறவன் லட்ச ரூவா குடுத்து கூட டிக்கெட் வாங்குவான்.


Santhakumar Srinivasalu
ஜன 01, 2026 19:24

நிர்வாக அதிகாரிகள் இந்த மோசடியை கூட நிறுத்தாமல் வேறு என்ன அரசாங்க புடுங்கற வேலை?


Balasubramanian
ஜன 01, 2026 17:59

பக்தி வியாபாரம் எல்லா தமிழ்க் கோவிலும் நடப்பது ஏன்? ஆன் லைன் புக்கிங் பார் கோடு என்று இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பல வழிமுறைகள் இருந்தும், ஏன் நடை முறை படுத்துவதில்லை? அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாது - தர்மமாக நிற்கும் அரங்க நாதனுக்கு -இறைவனுக்கு சேவை செய்யாமல் - என்கிற தொணடரடிப் பொடி ஆழ்வார் திருமாலை பாசுரம் தான் நினைவுக்கு வருகிறது!


theruvasagan
ஜன 01, 2026 22:36

இறைவனுக்கு நாம் அடிமை என்கிற எண்ணத்தை மனதில் கொள்ளாமல் பக்தன் என்கிற வெளிவேஷத்தை தங்கள் பிழைப்புக்காக மட்டும் போட்டுக் கொண்டு திரியும் மனிதர்கள் இறந்தால் அவர்கள் உடல்களை பிணம் தின்னும் பறவைகள் கொத்திக் கொண்டு போகுமாம். அப்படி போனாலும் அவர்கள் செய்த பாவங்களை நினைத்து அந்த துண்டங்களை தின்றால் நமக்கும் பாவம் வந்து சேரும் என்று அச்சப்பட்டு அந்த பறவைகள் உண்ணாமல் அவற்றை கீழே போட்டு விடுமாம். அத்தகையவர்களை புறம்சுவர் கோலம் செய்து புள் கவ்வ கிடப்பவர்கள் என்று சாடுகிறார் ஆழ்வார்.


ஆரூர் ரங்
ஜன 01, 2026 17:48

நாம் தெய்வத்தைக் காணவே இயலாது. தெய்வம் நம்மைக் காண்பதுதான் தரிசனம் என்பதை உணராத பக்தன் என்றுமே பரமபதமடைய முடியாது. திருட்டு வழியில் உள்ளே செல்வது நரகத்திற்கே அழைத்துச் செல்லும்.


kulanthai kannan
ஜன 01, 2026 17:42

பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்


Venugopal S
ஜன 01, 2026 16:41

நாலாயிரம் ரூபாய் டிக்கெட்டை இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கிச் செல்லும் அளவுக்கா திருட்டு கறுப்புப் பணமும் மூட நம்பிக்கையும் வளர்ந்து உள்ளது?


சொக்கன் ஸ்ரீரங்கம்
ஜன 01, 2026 15:36

"சொர்க்கவாசல் வியாபாரி". தன்னுடைய சந்ததியின் தலையில் பாவத்தை ஏற்றி வைக்கும் வணிகன். பிரபலமான கட்சி என்ற போர்வையை போர்த்திக்கொண்டு குளிர்காய்பவர்கள். சொக்கா உனது சொர்க்க வாசலை வைத்து கள்ளச்சந்தையில் ஈடுபட்ட இவர்களது ஆட்டம் முடிந்த பிறகு இவர்களுக்கு நல்ல வாசலை காட்டுமய்யா.


கூத்தாடி வாக்கியம்
ஜன 01, 2026 15:23

எல்லாம் முடிவுக்கு வரும்


சத்யநாராயணன்
ஜன 01, 2026 13:53

இறைவனை காண்பதற்கு டிக்கெட் விற்பனை என்பது மிகவும் கேவலமான இந்து மதத்தை இழிவுபடுத்தி அழித்து ஒழிக்க கூடிய ஒரு கீழ்த்தரமான செயல் இந்துக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும் எந்த கோவிலாக இருந்தாலும் சரி ஐந்து ரூபாய் கட்டணம் கூட செலுத்தி இறைவனை காணக் கூடாது என்ற சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் இந்து மதத்தின் கௌரவத்தையும் தனிச்சிறப்பையும் பேணி பாதுகாக்க முடியும்


அப்பாவி
ஜன 01, 2026 07:27

4000 ரூவா டிக்கெட்டே சாமி பேரை வெச்சு அடிக்கிற கொள்ளைதான்.


Kalyanaraman Subramaniam
ஜன 01, 2026 08:03

அந்தக் கொள்ளையும் செய்யறதுதான்...


புதிய வீடியோ