உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பள்ளிக்கல்வி துறையின் கல்லுாரிக்கனவு நிகழ்ச்சி; தனியார் பள்ளிகளிடம் கையேந்தும் அதிகாரிகள்

பள்ளிக்கல்வி துறையின் கல்லுாரிக்கனவு நிகழ்ச்சி; தனியார் பள்ளிகளிடம் கையேந்தும் அதிகாரிகள்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையால் மாவட்டந்தோறும் நடத்தப்படும், 'கல்லுாரிக்கனவு' நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு, மாணவர்களை அழைத்துச் செல்ல பஸ்கள் வழங்கும்படி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம், கல்வித்துறை அதிகாரிகள் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'கல்லுாரிக்கனவு' என்ற நிகழ்ச்சி, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. சிறிய மாவட்டங்களில் ஒன்றும், பெரிய மாவட்டங்களில், இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

4,000 மாணவர்கள்

அத்துடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை தொடராத மாணவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கான தொழிற்கல்வி படிப்புகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், 1,500 முதல், 4,000 மாணவர்கள் வரை பங்கேற்கின்றனர். இதனால், இந்த ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல், அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும், அரசு பள்ளி மாணவர்களை அழைத்துவர, தனியார் பள்ளி வாகனங்களை கேட்டு கெஞ்சுவதாகவும், புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: எங்கள் கோடை விடுமுறை பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படாமல், கல்லுாரிக்கனவு நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மிகவும் மோசமாக உள்ளது. அதிகாலையிலேயே பெற்றோரை சந்தித்து மாணவர்களை அழைத்து வருகிறோம். அவர்களுக்கான குடிநீர், உணவு உள்ளிட்டவற்றை, அதிகாரிகள் போதுமான அளவு ஏற்பாடு செய்வதில்லை.

கெஞ்சுகின்றனர்

ஆசிரியர்களுக்கு உணவு கிடையாது என்று தெரிவித்தால், அவர்கள் ஏற்பாடு செய்து கொள்வர். ஆனால், உணவகங்கள் இல்லாத பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில், உணவு இடைவேளையில் ஆசிரியர்கள் உணவுக்காக சென்றால், 'நீங்கள் வாங்கும் சம்பளத்தில், ஒரு வேளை உணவுகூட வாங்கிக்கொள்ள முடியாதா? ' என அவமானப்படுத்துகின்றனர்.மேலும், மாணவர்களை அழைத்துவர, தனியார் பள்ளி நிர்வாகத்திடம், பஸ்கள் வழங்கும்படி, அதிகாரிகள் கெஞ்சுகின்றனர். அவர்கள் பஸ்கள் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், அதை முறையாக செலவழிக்க வேண்டும். நிதி இல்லை என்றால், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.மேலும், தனியார் பள்ளிகளிடம் பஸ்களுக்கு கெஞ்சுவதற்கு பதிலாக, அரசு பஸ்களை நாள் வாடகைக்கு ஏற்பாடு செய்தால், அரசுப்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமைப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 20, 2025 11:08

அரசு பேருந்துகளில் அடிக்கடி டயர் வெடித்தால், கழன்று ஓடுதல், குப்புற கவிழ்தல் போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது,ஆதலால் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.


செல்வேந்திரன்,அரியலூர்
மே 20, 2025 18:47

இவனுககிட்டயிருந்து கொஞ்சம் தள்ளி நில்லுங்க!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை