சென்னப்பட்டணா, சண்டூர், ஷிகாவி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால், துணை முதல்வர் சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்குமென, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சிவகுமாருடன் 'மியூசிக்கல் சேர்' விளையாடி, முதல்வர் பதவியில் அமர்ந்த சித்தராமையாவுக்கு, 'முடா' முறைகேடு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையே காரணம் காண்பித்து, அவரை பதவியில் இருந்து இறக்க, காங்கிரசில் ஒரு கூட்டமே விளையாடி வருகிறது.முதல்வர் பதவி மீது சதீஷ் ஜார்கிஹோளி, எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர் உட்பட, அரை டஜன் அமைச்சர்கள் கண்வைத்துள்ளனர் திரைமறைவில் வேலை செய்கின்றனர். சட்டத்தின் பிடி இறுகினால், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்யும் வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் காங்., மேலிடமும் ஆர்வம் காட்டுகிறது.முடா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, சித்தராமையாவிடம் எதிர்க்கட்சிகள் ராஜினாமா வலியுறுத்தின. அப்போது காங்., மேலிடம், இவருக்கு ஆதரவாக நின்றது. 'முதல்வர் மாற்றப்படமாட்டார். அதுகுறித்து வாயை திறக்காதீர்கள்' என, அமைச்சர்கள், தலைவர்களுக்கு அது கட்டளையிட்டது. எனவே மவுனமாகினர்.இந்நிலையில் சென்னப்பட்டணா, சண்டூர், ஷிகாவி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருப்பதால், மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, மாநில தலைவருமான சிவகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளது.இந்த தேர்தல் முடிவு அவரது திறனை, மேலிடத்துக்கு காட்டும். இது அவரது முதல்வர் கனவை, நனவாக்க உதவியாக இருக்கும்.மூன்று தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால், முதல்வர் பதவி கிடைக்கும் என, காங்., மேலிடம் மறைமுகமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகுமார் அதிக உற்சாகத்துடன் பணியாற்றுகிறார்.மூன்று தொகுதிகளிலும், பம்பரமாக சுற்றுகிறார். தன் ஆதரவு அமைச்சர்கள், தலைவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். தொகுதிகளுக்கு சென்று, தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். இந்த உற்சாகத்தை முதல்வர் சித்தராமையாவிடம் காண முடியவில்லை. இடைத்தேர்தல் முடிந்த பின், கர்நாடக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம்.கட்சி எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா கூறியதாவது:விரைவில் நடக்கும் மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், சிவகுமாரை முதல்வராக்கும் தேர்தலாகும். எனவே தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும். எந்த காரணத்தை கொண்டும், சிவகுமாரை விட்டு கொடுக்கக் கூடாது.கர்நாடகாவில் அரசியல் மாற்றம், சென்னப்பட்டணா தொகுதியில் இருந்தே ஆரம்பமாகும். தன் தம்பி சுரேஷை, சென்னப்பட்டணாவில் களமிறக்கி, வெற்றி பெற வைப்பது சிவகுமாருக்கு மிகவும் எளிது. ஆனால் அவர் யோகேஸ்வர், சிறப்பாக பணியாற்றுகிறார் என்பதால், தொகுதியை தியாகம் செய்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -