உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுங்கத்துறையின் விசாரணை முடிவு தெரியாமலே கிடப்பில் போடப்படும் கடத்தல் வழக்குகள்

சுங்கத்துறையின் விசாரணை முடிவு தெரியாமலே கிடப்பில் போடப்படும் கடத்தல் வழக்குகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடத்தல் மற்றும் சட்டவிரோத இறக்குமதி தொடர்பான விசாரணை விவகாரங்களில், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து, பல்வேறு கடத்தல்கள் நடக்கின்றன. விமானங்கள் மற்றும் கப்பலில் கடத்தி வரப்படும் பொருட்களை, சுங்கத்துறை அதிகாரிகள் அடிக்கடி பறிமுதல் செய்கின்றனர். இருப்பினும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள், முக்கியமான வழக்குகளின் விசாரணையை தொடர முடியாமல் கிடப்பில் போட்டுள்ளனர். திடீர் சோதனைகள் நடத்திய அதிகாரிகள், கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களின் அழுத்தம் காரணமாக, தங்கள் பொறுப்புகளை தவிர்த்து, விசாரணை பணியில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு வழக்குகளின் விசாரணைகள் முடிவு தெரியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்களின் அழுத்தம், மேல் அதிகாரிகளின் கெடுபிடி போன்றவற்றால் தொடர்ந்து விசாரணை செய்ய முடிவதில்லை என்கின்றனர், சுங்கத்துறை அதிகாரிகள்.

இது குறித்து, சுங்கத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடத்தல் மற்றும் சட்டவிரோத இறக்குமதி போன்றவற்றின் பின்ணனியில், பெரிய அளவில் குழுக்கள் செயல்படுகின்றன. பிடிபடுவோர் சிலரை பிடித்து விசாரிக்கும் போது, அவர்களுக்கு பின்னணியில் அரசியல் மற்றும் அதிகாரமிக்கவர்கள் இருக்கின்றனர். கடந்தாண்டு சென்னை விமான நிலையத்தில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட சம்பவத்திலும் இதே நிலை தொடர்கிறது. அப்போது இருந்த அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்துவதற்குள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபோல சமீபத்தில் பிடிபடும் கடத்தல் விஷயங்களில், உயர் அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருக்கிறது. ஒரு கடத்தல் வழக்கை விசாரித்து கொண்டு இருக்கும் போதே, அந்த அதிகாரியின் தலையில் பிற வழக்குகளை கட்டி விடுகின்றனர். இதனால், அதிருப்தி அடையும் அவர், முந்தைய வழக்கை விட்டு விடுகிறார். இப்படித்தான் பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை வளையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள்

கடத்தல் வழக்குகளின் விசாரணையை முடிக்காமல் இழுத்தடிக்கும் சுங்கத்துறை அதிகாரிகளை, மத்திய நிதி அமைச்சகத்தின் சிறப்பு குழு கண்காணித்து வருகிறது. ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக பணிபுரியும் அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறது. அதிலும் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத அதிகாரிகளுக்கு, அமைச்சகத்தில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் மீது, துறை ரீதியான விசாரணையும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி