டபுள்கேம் ஆடுகிறார் ஸ்டாலின்: பழனிசாமி பிரசாரம்
கோவை: ''தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில், 'டபுள்கேம்' ஆடுகிறார் ஸ்டாலின். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழகம் பாதிக்காது,'' என்று கோவையில் அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரம் செய்தார். கோவை காந்திபுரத்தில், அ.தி.மு.க.,வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு, அவர் பேசியதாவது: கோவையில் நீடிக்கும் சிறு தொழில் பிரச்னை தீர்க்கப்படும். அ.தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ரேஷனில் தரமான அரிசி பருப்பு வழங்கப்படும். அதிகாரிகள், இனியும் தி.மு.க., ஆட்சி தொடரும் என்ற நினைப்பில் இருக்கக் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். கரூரில் பொய் வழக்கு போடுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், போடப் போட்ட பொய் வழக்கு அனைத்தையும் தோண்டி எடுப்பேன். உரிய நடவடிக்கை எடுப்பேன். தவறாக நடக்கும் அதிகாரிகளை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். முன்பிருந்த பழனிசாமி வேறு; இப்போது இருக்கும் பழனிசாமி வேறு. தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்காக செய்யவில்லை. சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி தேவையா என்று மக்கள் யோசிக்க துவங்கியுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில், 'டபுள்கேம்' ஆடுகிறார் ஸ்டாலின். லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழகம் பாதிக்காது. ஆனால், இதை எதிர்த்து வீடுகளில் தி.மு.க.,வினர் கருப்புக்கொடி கட்டுவதாக கூறியிருந்தனர். ஆனால், எங்குமே கருப்பு கொடி இல்லை. இவ்வாறு அவர் பேசினார். செந்தில் பாலாஜியை சீண்டிய பழனிசாமி பழனிசாமி பிரசாரம் செய்து பேசுகையில், ''கடந்த 2019 - 2021 காலத்தில் கொடிய நோய் வந்தது. அந்த நோயைவிட இப்போது கொடிய வைரஸ் நோய் கோவைக்கு வந்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில் நிற்கும் தி.மு.க., வேட்பாளர், கரூரை சுரண்டிவிட்டு, இப்போது கோவை வந்துள்ளார். அவரை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும். இதற்கு முன்பு செந்தில் பாலாஜியை ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால், இப்போது அவரைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார். அவர் தலைமைக்கு கப்பம் கட்டுகிறார். அதிலிருந்து ஒரு பங்கை எடுத்து, இங்கு செலவு செய்கிறார். கோவை தெற்கு தொகுதியில் பட்டிபோட்டு கரூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றக்கடாது. 18 பேரை பினாமியாக சுயேச்சையாக நிறுத்தி, மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர்,'' என்றார்.