உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.7,351 கோடி பாக்கியால் திணறும் மின் வாரியம்; தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்

ரூ.7,351 கோடி பாக்கியால் திணறும் மின் வாரியம்; தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகளின் அலட்சியத்தால், 7,351 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கியால், மின் வாரியம் திணறி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u71wh2od&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சி, 138 நகராட்சி, 529 டவுன் பஞ்சாயத்து, 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில், குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்சாரம் வினியோகிக்கப் படுகிறது. பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வாரியம் போன்றவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

துண்டிப்பு

ஆனால், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறைகள், மின்வாரியத்துக்கு முறையாக, மின் கட்டணத்தை செலுத்துவதில்லை. ஏற்கனவே தமிழக மின் வாரிய நிதி நிலை மிக மோசமாக உள்ளது. இதை காரணம் காட்டி, தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.வீட்டு இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். இதனால் தனி நபர்கள், குறித்த காலத்தில் கட்டணம் செலுத்துகின்றனர்.ஆனால், 60 நாட்கள் அவகாசம் அளித்தும், உள்ளாட்சி அமைப்புகள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தாமல் உள்ளன. அதேபோல, குடிநீர் வாரியம் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும், மின் கட்டணத்தை சரிவர செலுத்துவதில்லை.கடந்த, 2022 - 24 வரை, தண்ணீர் இல்லாத ஆழ்துளை குழாய் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் குறித்து கணக்கெடுத்து, 1,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பல இணைப்புகளை துண்டிக்க, உள்ளாட்சி அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன.அந்த இணைப்புகளுக்கு மின் கட்டண பாக்கி உள்ளதால், மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை.

ரூ.1.90 லட்சம் கோடி கடன்

தமிழக மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்பிரமணி கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர், தெருவிளக்கு போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள, 5.68 லட்சம் மின் இணைப்புகளில், 3,016 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளது. குடிநீர் வாரியம், பள்ளி, விடுதி, மருத்துவமனை, அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு துறைகளை சேர்த்து, 1.07 லட்சம் மின் இணைப்புகளில், 4,335 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளது. இதில், குடிநீர் வடிகால் வாரியம் மட்டும், 9,000 இணைப்புகளில், 1,900 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. உள்ளாட்சி அமைப்பு, அரசின் பிற துறைகள் என, தமிழக அரசு மூலம் செலுத்த வேண்டிய மின் கட்டணம், 7,351 கோடி ரூபாய் உள்ளது. கடந்த 2021 - 22ல், 4,000 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கியாக இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 3,351 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 2020 - 21ல், 1.45 லட்சம் கோடி ரூபாய், மின் வாரியத்துக்கு கடன் இருந்தது; 2021 - 2024ல், 1.90 லட்சம் கோடி ரூபாயாக கடன் தொகை அதிகரித்து உள்ளது.மின் வாரியத்தில் இருந்து, ஒவ்வொரு அலுவலகத்துக்கும் பாக்கியை உடனே செலுத்த கடிதம் அனுப்பப்படுகிறது; ஆனாலும், வசூலிக்க முடியவில்லை. மின் கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி, பிற பிரிவுகள் போல், உடனே இணைப்பை துண்டிக்க முடியாது. ஏனெனில் அரசு பணிகளிலும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பாக்கியை செலுத்த, அழுத்தம் மட்டும் கொடுக்கிறோம். இதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகையை செலுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மின் திருட்டும் ஒரு காரணம்!

ஊரக உள்ளாட்சி பகுதிகளில், 1,10,436 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி - 4,567; சிறு மின்சார பம்பு - 1,17,360; மின்சார பம்பு - 1,12,076; கை பம்பு - 1,57,418, பொது கழிப்பறை - 5,009 உள்ளன. இவற்றில் நீரேற்றும் நிலையம், ஆழ்துளை குழாய் கிணறுகளில் உள்ள மின்மோட்டார் இயக்க, மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, 43 குடிநீர் வடிகால் வாரிய கோட்டங்கள் மூலம், 523 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சட்டசபை, லோக்சபா, உள்ளாட்சி தேர்தல்கள், கட்சி கூட்டம், பொது நிகழ்ச்சிகளில், சில அரசியல் கட்சியினர், கொக்கி போட்டு மின் திருட்டில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்புகளில், அதன் கட்டணம் அதிகரித்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.

தனி அலுவலர் செலுத்துவரா?

மாநில மின் வாரிய நிதி நெருக்கடியை சரிசெய்யும், மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில், 2017ல் தமிழகம் இணைந்தது. இதனால், மின்சாரம் விற்பனைக்கு ஏற்ப மின் வாரியம், மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில், 3,016 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம், தலைவர், மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அவர்களில் பலர், 'கமிஷனை' எதிர்பார்த்து, உள்ளாட்சி வருவாயை, ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டும் செலவிட்டனர். தற்போது உள்ளாட்சி அமைப்புகள், தனி அலுவலர் நிர்வாகம் செய்யப்படுவதால், முறையாக மின் கட்டணத்தை செலுத்துவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஜன 24, 2025 05:58

செயலற்ற மின் பகிர்மான கழகம்.


சம்பா
ஜன 23, 2025 10:56

பாரபட்சமின்றி துண்டிப்பது ஒண்றே சரியான தீர்வ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை