உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூடங்குளம் மின்சாரம் முழுதும் வாங்க தமிழகம் ஆர்வம்: விலையை சொல்ல அணு மின் கழகம் மறுப்பு

கூடங்குளம் மின்சாரம் முழுதும் வாங்க தமிழகம் ஆர்வம்: விலையை சொல்ல அணு மின் கழகம் மறுப்பு

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய அணு உலைகளில், அடுத்த ஆண்டு மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த மின்சாரம் என்ன விலைக்கு வழங்கப்படும் என்று, தமிழக மின்வாரியம் கேட்டும், இந்திய அணுமின் கழகத்திடம் இருந்து பதில் இல்லை.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்திற்கு, அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகாவாட் திறனில், இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட்டும், மீதி மின்சாரம் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழக மின்தேவையை பூர்த்தி செய்வதில், கூடங்குளம் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மின்சாரத்தை ஒரு யூனிட் சராசரியாக, 3.50 ரூபாய் - 4 ரூபாய் விலையில், மின்வாரியம் வாங்குகிறது.

1,000 மெகாவாட்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா, 1,000 மெகாவாட் திறனில், மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்றாவது அணு உலையில் அடுத்த ஆண்டும், நான்காவது அணு உலையில், 2027ம் ஆண்டிலும் உற்பத்தி துவங்க உள்ளது. இந்த மின்சாரம் என்ன விலைக்கு வழங்கப்படும் என்று, மத்திய மின்துறையின் கீழ் இயங்கும் தென்மாநில மின்சாரக்குழு கூட்டத்தில், மின்வாரியம் கேட்டுள்ளது. மற்ற மாநில அரசுகள் கூடங்குளம் மின்சாரத்தை வாங்கவில்லை எனில், அதை தமிழக மின்வாரியம் வாங்க ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூடங்குளம் அணு மின்சாரம் நிலையாக கிடைக்கிறது. மற்ற வகை மின்சாரத்தைவிட, குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே, விரிவாக்க மின்சாரத்தை முழுதும் தமிழகத்திற்கு வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதை, மத்திய அரசு ஏற்கவில்லை. தற்போதைய தகவலின்படி, கூடங்குளம் விரிவாக்க மூன்றாவது, நான்காவது அணு உலைகளின் மொத்த மின்சாரத்தில் தமிழகத்திற்கு, 50 சதவீத பங்கு கிடைக்கும் என்று தெரிகிறது.மீதியுள்ள மின்சாரத்தில், 15 சதவீதம் மத்திய அரசுக்கும், 35 சதவீதம் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும். கூடங்குளம் விரிவாக்க மின்சாரத்தை முழுதுமாக தமிழகத்திற்கு ஒதுக்க வலிறுத்திய கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை.

பிற மாநிலங்கள்

எனவே, என்ன விலைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்ற விபரம் முன்கூட்டியே தெரிந்தால், பிற மாநிலங்கள் அந்த விலைக்கு வாங்குமா, வாங்காதா என்பது தெரியவரும். வாங்காதபட்சத்தில், அந்த மின்சாரத்தை வேறு யாருக்கும் ஒதுக்காமல், தமிழகம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மின்சார விலையை தெரிவிக்குமாறு கேட்டதற்கு, 'கட்டுமானப் பணி முழுதுமாக முடிந்த பின்பே விலை விபரம் சொல்லப்படும்' என, அணுமின் கழகம் தெரிவித்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழன்
ஏப் 14, 2025 14:10

கூடங்குளம் மட்டுமல்ல மத்திய அரசின் மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் வழங்கப்படும் ஆனால் வாங்கிய மின்சாரத்திற்கு காசு கொடுக்க வேண்டும். மின்சாரத்தை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் பின்னர் மின்சாரம் வழங்குவதை நிறுத்தினால் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது


R Barathan
ஏப் 12, 2025 11:47

கூடங்குளம் அணுஉலை நிறுவும் போது எல்லா கட்சிகளையும் கூட்டணி வைத்து எதிர்த்து விட்டு இப்போது மண்டியிட்டு உள்ளார்கள். இது தான் கடவுள் நின்று கொள்வான் என்பது. இப்போதாவது கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


Karthik
ஏப் 11, 2025 22:16

அப்ப கூடங்குளம் எதிர்ப்பு னு சொல்லி ஒரு பெரிய ட்ரெண்டிங் 24/7 பண்ணாங்களே.. அதெல்லாம் என்னாச்சு எங்க போச்சு..??


அப்பாவி
ஏப் 11, 2025 16:55

வாங்கிப்பாங்க. காசு குடுக்க மாட்டாங்க. முன்னாடியே காசை வாங்கிட்டு மின்சாரம் குடுங்க.


அருண், சென்னை
ஏப் 11, 2025 12:50

இதுவெல்லாம் பண்ணின பிறகு இப்போ கெஞ்சவுட்டான் பாரு கடவுள்...அங்க நிக்கிறான் கடவுள்..


மணி
ஏப் 11, 2025 06:29

பல வருசம் முன்பு இத தடுக்க கடல்ல நின்னானுக ...


முக்கிய வீடியோ