கோவை; கோவை மக்கள் மத்தியில், பொங்கல் தொகுப்பு அளித்த ஏமாற்றம் இன்னும் மாறவில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் அதிருப்தியும், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விடுமோ என்ற கோணத்தில், ரேஷன்கடைகாரர்களிடம் தி.மு.க.,வினர் ரகசிய 'சர்வே' நடத்தி வருகின்றனர்.இந்த முறை பொங்கல் தொகுப்புடன், 1000 ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, தொகுப்பு வழங்கும் இறுதி நாள் வரை இருந்தது. ஆனால் பணம் இல்லை என்று தெரிந்தவுடன், பெரும்பாலான கார்டுதாரர்கள் சோர்ந்து போனார்கள். 'டோர் டெலிவரி' நிலை
பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ள, ரேஷன்கடைக்கு செல்வதை தவிர்த்தனர். ஒரு கட்டத்தில் பொங்கல் தொகுப்பை வாங்கிக் கொள்ளுமாறு, மெகாபோன் வாயிலாக வீதி வீதியாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியும் பெரியளவில் யாரும் வந்து வாங்கிக் கொள்ளாததால், ரேஷன் கடை ஊழியர்கள், 'டோர் டெலிவரி' செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விடக்கூடும்; வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என்ற அச்சம், கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதனால், மக்களின் அதிருப்தியை சரி செய்வதற்கான களப்பணியில், தி.மு.க., ரகசியமாக இறங்கி உள்ளது. அமைச்சருக்கு 'அசைன்மென்ட்'
1000 ரூபாய் கொடுக்காதது கார்டுதாரர்கள் மத்தியில், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை, ஆய்வு செய்து தகவல் தரும்படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு, மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ரேஷன் அதிகாரிகள், ரேஷன்கடை ஊழியர்கள் வாயிலாக ரகசியமாக தகவல் சேகரித்து வருவதாக, ஊழியர்கள் காதை கடிக்கின்றனர்.ரேஷன்கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'ரேஷன் கார்டுதாரர்களை பொறுத்தவரை, ரேஷனில் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை என்றால், பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட, 1000 ரூபாய் இந்த ஆண்டு கிடைக்கவில்லை என்பது, அவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளது என்பதை எல்லாம், சாதாரண மக்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. பொங்கல் தொகுப்பு வாங்க வந்த பலர், அரசை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி சென்றது உண்மை. இது குறித்து, அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்' என்றனர். காற்றில் பறந்த வாக்குறுதிகள்
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உளுத்தம் பருப்பு வழங்கப்படும் என்றும், பதினைந்து நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தன. இவை எதுவும் அமலுக்கு வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு கொடுக்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் பண்டிகை முடிந்த பிறகே, சப்ளை செய்யப்படுகின்றன. இந்த முறை யாருக்கும் வேட்டி, சேலை முறையாக வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு, 1.20 லட்சம் பேருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படவில்லை. இம்மாதம் இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பொது வினியோகத் துறையை தனித்துறையாக அறிவிப்பதாக முதல்வர் சொல்லி இருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் வைக்கும் எந்த கோரிக்கையையும் இந்த அரசு கண்டு கொள்வதில்லை என்றெல்லாம், அரசு மீது ஊழியர் சங்கம் குற்றம் சுமத்துகிறது.தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கை, 2.20 கோடி. இதை வாக்காளர் எண்ணிக்கையாக பகுத்து பார்த்தால், இரு மடங்குக்கு மேல் இருக்கும். இந்த ஓட்டுக் கணக்கை எல்லாம் கூட்டிக்கழித்து பார்த்துதான், தி.மு.க., இந்த ரகசிய சர்வேயை நடத்தி வருவதாக, கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
வழங்க புதிய பட்டியல்
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், பொருளாதார அடிப்படையில் சேர்க்கப்படாதவர்கள், எல்லோருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க, புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில், மகளிர் உரிமைத்தொகை வாங்குவோரின் எண்ணிக்கை, சில லட்சம் அதிகரிக்க உள்ளது. இவை அனைத்தும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திட்டமிட்டு துரிதப்படுத்தப்படுவதாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர்.