முதல்வரே ஒரு நிமிஷம்: சிலிண்டரால் சிதறிய வாழ்க்கை
செய்தி:
'சிலிண்டர்' வெடித்து இளைஞரின் இரு கரங்கள் சிதறிய கோரம்!அநீதி:
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் நீதியும், நிவாரணமும் கிடைக்காத பரிதாபம்!முதல்வரே... வலது, இடது பக்கங்களில் முழங்கைக்கு கீழ் இழந்து நிரந்தர ஊன முற்றிருக்கும் நான் சென்னை, கோடம்பாக்கம் தாஸ்புரத்தின் 25 வயது மாற்றுத்திறனாளி திலீப்; 'ஏசி' டெக்னீஷியன்; கிரிக்கெட் வீரன்.'வலிப்பு நோய்' பாதிப்பால் வீட்டோடு அப்பா முடங்கியிருக்கும் சூழலில், வீட்டுவேலை பார்த்து வரும் அம்மாவின் வருமானம் போதாது, பகலில் தனியார் நிறுவனத்தில் 'ஏசி' டெக்னீஷியன் பணி, இரவில் ஆட்டோ ஓட்டு நர் என வருமானம் ஈட்டி வந்தேன். கடந்த மே 17ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால், இன்னும் திருமணம் நிகழவில்லை. ஆம்... நிச்சயதார்த்தம் முடிந்த இரண்டாவது நாள், மே 19ம் தேதி காலை 10:00 மணிக்கு, நான் பணியாற்றி வந்த நிறுவனத்தின் 'ஏசி' பழுது நீக்கும் பணியில் 'காஸ் சிலிண்டர்' வெடித்து, எனது முழங்கைக்கு கீழான பகுதிகள் துண்டாகி விட்டன.ஆர்2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் 0071/2026ன் கீழ் 'முதல் தகவல் அறிக்கை' பதிவானது. பணி இடத்தில் முறையான பாதுகாப்பு சூழலையும், உபகரணங்களையும் உறுதிப்படுத்தாத நிறுவனம் மீது நடவடிக்கை கோரி, பெருநகர சென்னை காவல் துறையின் தென்மண்டல இணை ஆணையருக்கு ஜூன் 5ம் தேதி மனு அனுப்பினேன்.'பணியிடத்து விபத்து நிவாரண உதவித்தொகை' கோரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸை, ஜூலை மாதம் தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தேன். அமைச்சர் உத்தரவின் பேரில் நிகழ்ந்த அழைப்பால், அக்டோபர் 6, 2026ல் சென்னை, தொழிலாளர் இணை ஆணையர் - 1 அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். ஆனால்... இன்னும் எந்த நல்லதும் நிகழவில்லை.முதல்வர் அண்ணா... வருமானமின்றி நான் தவிக்கிறேன்; 'செயற்கை கை' பொருத்த அல்லது 'உறுப்பு மாற்று' அறுவை சிகிச்சை செய்ய எனக்கு உதவுவீர்களா?