பொற்பனைக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஒன்றியத்தில், புதுக்கோட்டையில் இருந்து, கிழக்கே 6.50 கி.மீ., தொலைவில் உள்ளது, பொற்பனைக்கோட்டை கிராமம். இங்கு, 50 ஏக்கர் சுற்றளவில் சிதிலமடைந்த கோட்டை, கொத்தளங்கள் உள்ளன.இவ்வளவு பெரிய கோட்டை இருந்தும், இது எந்த அரசன் கட்டியது, யார் பயன்படுத்தினர் என்பது பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை. இங்கு, 2023ல், தமிழக தொல்லியல் துறையின் சார்பில், அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில், அரண்மனைத்திடல் என்ற பகுதியில் முதல் கட்ட அகழாய்வு நடந்தது. அதில், சங்க காலம் அல்லது அதற்கு முற்பட்ட காலத்திலேயே இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
கடந்த 2024- - 25 அகழாய்வு பருவத்தில், இரண்டாம் கட்ட அகழாய்வும், அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலேயே நடத்தப்பட்டது. பழைய அகழாய்வு இடத்திற்கு மேற்கே ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, அவற்றில் இருந்து 1,945 தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
பொற்பனைக்கோட்டையில், சங்க காலத்திலும், அதற்கு முன்னும், பின்னும் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஊரின் பெயருக்கு ஏற்ப, இப்பகுதியைச் சுற்றி, 5 மீட்டர் உயரம் மண்ணால் ஆன கோட்டையில், ஆங்காங்கே 13 அடுக்குகளில் தலா 1 மீட்டர் உயரம் மற்றும் அகலத்தில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கட்டுமானத்தில், ஏற்கனவே சிதைந்த சங்ககால கட்டடப்பகுதியில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் கிடைத்துள்ளன.
வெளிக்கோட்டைக்கு உள்ளே, 3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள உள்கோட்டை அல்லது அரண்மனைத்திடல் என்ற பகுதிதான் வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளது. இங்கு அகழாய்வு செய்ததில், வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் கிடைத்துள்ளது. இது, எதற்கானது என்பதை அறிய முடியவில்லை. இங்கு, பல்வேறு கால கட்டுமானங்கள் ஒன்றன்மீது ஒன்றாக உள்ளன. அதாவது, ஒரே கட்டுமானத்தில், அடுத்தடுத்து பராமரிக்கப்பட்டோ அல்லது, புதிய கட்டுமானங்களோ எழுப்பப்பட்டிருக்கலாம்.
இங்கு மேம்பட்ட நீர்வழித்தடம், செம்பு, இரும்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள் மற்றும் மணிகள் செய்யும் தொழில், நெசவுத்தொழில் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வெளிநாட்டு பானை ஓடுகள், அரிய, விலை உயர்ந்த மணிகள், தங்க மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணங்களின் பகுதிகள் கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்துள்ள பொருட்கள் அனைத்தும் வசதியான மக்கள் பயன்படுத்தியவையாக உள்ளன. இதன் வாயிலாக, இப்பகுதியில், அரச குலத்தவரோ, மேல்தட்டு மக்களோ வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அவர்களுக்கு தேவையானவற்றை செய்யும் தொழிற்கூடங்களும், தொழிலாளர்களும் கோட்டைக்கு உள்ளேயே இருந்துள்ளன. இங்கு வாழ்ந்தது யார், அவர்கள் இடம்பெயர்ந்தது எதனால் என்பதை அறிய முடியவில்லை. அதேசமயம், இந்த பகுதியின் அருகில் திருவரங்குளம், பெருங்களூர் உள்ளிட்ட இடங்களில் இரும்பு உருக்கு உலைகளும், இரும்பு கசடுகளும் அதிகளவில் கிடைக்கின்றன. அதற்கு வலு சேர்க்கும் வகையில், இந்த பகுதிக்கு அருகில் உள்ள பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருவரங்குளம் கோவில் கல்வெட்டில் இரும்பு உருக்குவோருக்கு வரி விதித்தது பற்றிய செய்தி உள்ளது. மேலும், அருகில் 5 கி.மீ., தொலைவில் உள்ள திருக்கட்டளை, கலசக்காடு பகுதிகளை இரும்புக்கால ஈமக்காடாக, சுதந்திரத்துக்கு முன்பே, மத்திய தொல்லியல் துறை அடையாளப் படுத்தி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. அவை மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அதனால், இதன் அருகில் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து அகழாய்வு செய்து, அவற்றின் முடிவுகளை ஒருங்கிணைத்தால், இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் பண்பாடு பற்றிய புரிதல் ஏற்படும். - தங்கதுரை, அகழாய்வு இயக்குநர்