மெல்ல மடிகிறது கோவையின் ஜீவநதி! பிளாஸ்டிக் கழிவால் கட்டுறாங்க சமாதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தொண்டாமுத்தூர்: கோவையின் ஜீவநதியாக விளங்கி வரும் நொய்யல் ஆற்றில், பல்வேறு இடங்களிலும் கழிவுநீர் கலப்பதால், ஏராளமான பிளாஸ்டிக் கழிவு குவிந்து வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆயிரக்கணக்கான சிற்றோடைகள் மற்றும் ஓடைகள், தொம்பிலிபாளையத்தில் இணைந்து, கோவையின் ஜீவ நதியாக விளங்கி வரும் நொய்யல் ஆறு உருவாகிறது. இங்கிருந்து, பெருக்கெடுக்கும் நொய்யல் ஆறு, அதன் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், இரண்டு வாய்க்கால்களை உருவாக்கி, தொடர்ந்து பயணிக்கிறது. இந்த நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் மூலம், 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கும், குட்டைகளுக்கும் நீர் செல்கிறது. அதோடு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள சுமார், 5,000 ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி பாசனமும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதன் மூலம் 20,000 ஏக்கர் பரப்பளவிற்கு மறைமுக பாசன வசதியும் கிடைத்து வருகிறது. கழிவு நீர் கலப்பு
இந்நிலையில், நொய்யல் ஆறு உருவாகும் மத்வராயபுரம் ஊராட்சியில் துவங்கி, ஆலாந்துறை, பூலுவபட்டி, மாதம்பட்டி, பேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எவ்வித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலந்து, நீர் மாசுபட்டு வருகிறது. அதோடு, நொய்யல் ஆற்றில், டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவும் குவிந்து வருகிறது. அதேபோல, நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும், தொண்டாமுத்தூர், தாளியூர், வேடபட்டி பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், நேரடியாக வாய்க்காலில் கலந்து வருகிறது. இதனால் நீர் மாசுபடுவதோடு, மண் மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, கால்நடை பாதிப்பு என, பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கவனிப்பாரா கலெக்டர்?
இயற்கையின் கொடையை, காக்க, நொய்யலாறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில், கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்காமல் தடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், விரைவில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்குள் நொய்யல் ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, கழிவு நீர் கலப்பதையும் தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.