உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பட்டா இருக்கு, நிலம் எங்கே? 1,350 குடும்பங்கள் தவிப்பு

பட்டா இருக்கு, நிலம் எங்கே? 1,350 குடும்பங்கள் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட, 1,500 ஏழை குடும்பங்களுக்கு, அமைச்சர் மகேஷ் கடந்த ஜனவரி மாதம் விழா நடத்தி, 2 சென்ட்டில் அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.இவர்களுக்கு, திருநெடுங்குளம் பகுதியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், இடம் ஒதுக்கீடு செய்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் 1,350 குடும்பங்களுக்கு இடம் அளந்து, ஒதுக்கீடு செய்து, ஒப்படைக்கப்படவில்லை. அவ்வப்போது திருவெறும்பூர் தாசில்தாரை அணுகி, போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேருக்கு மட்டும், வருவாய்த் துறையினர் நிலத்தை அளந்து கொடுத்துள்ளனர்.பட்டா இருந்தும், இன்னும் நிலம் கிடைக்காதவர்கள், இதுகுறித்து திருவெறும்பூர் தாசில்தாரை அணுகினால், மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று கூறுகிறாராம். இதனால், வெறுத்துப்போன 1,350 குடும்பத்தினரும் பட்டாவை திருப்பிக் கொடுத்துவிட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட பா.ஜ., செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறியதாவது:

கடந்த ஜனவரி 26ம் தேதி, 1,500 பேரை பஸ்களில் அழைத்துச் சென்று இலவச நிலம் கொடுப்பதாகக் கூறி கம்ப்யூட்டர் பட்டா வழங்கினர்; 2 சென்ட் நிலம் தருவதாகக் கூறினர். அவர்கள் ஒதுக்கியுள்ள இடம், ரோட்டில் இருந்து, 5 அடி பள்ளத்தில் உள்ளது. அதை, அரசு தான் அளந்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், வருவாய்த் துறையினர் அதை செய்ய மறுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் கூறுகையில், “பட்டா வழங்கப்பட்டு விட்டது; நிலத்தையும் காண்பித்து விட்டோம். அளக்க வாடகைக்கு மிஷின் எடுக்க வேண்டி உள்ளது. அதனால், மொத்தமாக வரச் சொல்கிறோம். அவர்கள் எல்லையை அளக்க கல்லும் வாங்கித்தர சொல்லி உள்ளோம். விரைவில், நிலத்தை ஒப்படைத்து விடுவோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை