* அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. தி.மு.க., அரசின் சர்வாதிகார போக்கிற்கு, தமிழக மக்களே விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர். * த.மா.கா., தலைவர் வாசன்: ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களை, தி.மு.க., அரசு கைது செய்ததும், தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்ததும், மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழும் போது, அவற்றை சட்டரீதியாக எதிர் கொள்ளாமல், அடக்குமுறையை கையாள்வது, அவர்களின் இயலாமையை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. * ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசுக்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்களை, அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், தி.மு.க.,வை விமர்சிக்கும் அனைவரையும் கைது செய்வது, ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல். * பா.ம.க., தலைவர் அன்புமணி: டாஸ்மாக் ஊழலை கண்டித்து, போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களை, காவல் துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க.,வினர் ஊழல் செய்யவில்லை என்றால், இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
ஊழியர்களுடன் கடைக்கு பூட்டு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் இல்லாததால், டாஸ்மாக் ஊழியர்களை கடைக்குள் வைத்து, கடையை மூடினர். மது அருந்த வந்தவர்களை வெளியே துரத்தினர்.