பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை குறித்த நம் அரசின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு விளக்கி கூற, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள் வெளிநாடு சென்றுள்ளன. அதில் எந்த குழுவும் நம் அண்டை நாடுகளுக்கு செல்லவில்லை. இதனால், அண்டை நாடுகளை நம் அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்ற எண்ணம் அந்த நாடுகளில் துளிர்விட்டுள்ளது. இந்த பிரச்னையை நாம் இனியாவது லாவகமாக அணுக வேண்டும். ஆதரிக்கவில்லை
நம் அண்டை நாடுகளுக்கு நம் அரசு ஏன் இது போன்ற குழுக்களை அனுப்பி அந்த அரசுகளையும், அங்குள்ள அறிவுஜீவிகளையும் நம் வயப்படுத்த முயலவில்லை? இதற்கு, அரசு ரீதியான காரணம் ஒன்று உள்ளது என்று கூறலாம்.மத்திய அரசை பொறுத்தவரையில், அடுத்து வரும் ராஜ தந்திர நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து செயல்படுகிறது. தற்போது, ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்களில் பாகிஸ்தானும் ஒன்று. வரும் ஜூலை மாதம், பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைத்துவம் பாகிஸ்தான் வசம் இருக்கும். போதாததற்கு, கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் சீனாவும் ஒன்று. மற்ற நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த நம் கருத்தை ஆதரிக்கின்றன; அமெரிக்காவும், பிரிட்டனும் முழுமையாக ஆதரிக்கவில்லை.இந்த பின்னணியில், பாதுகாப்பு கவுன்சிலின் இந்நாள் உறுப்பு நாடுகள், அடுத்தடுத்து புதிதாக பதவியேற்க இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற உறுப்பு நாடுகளையும் குறி வைத்தே நம் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு பயணப்பட்டுள்ளன. அது தவிர, அமெரிக்கா போன்ற செல்வாக்கு மிக்க நாடுகளும் இந்த பட்டியலில் அடங்கும்.பாகிஸ்தான் பயங்கரவாத விஷயத்தில் உண்மையான களநிலவரத்தை உலகிற்கு உணர்த்துவதே, எம்.பி.,க்கள் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி. இதன் வாயிலாக, பாதுகாப்பு கவுன்சிலில், தான் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு மாத காலத்தில், மற்ற உறுப்பு நாடுகளை நம்ப வைத்து, பாகிஸ்தான் நம்மை எதிர்த்து காய் நகர்த்துவதை தடுப்பதற்கே இந்த முயற்சி.மற்ற நாடுகளின் ஐ.நா., பிரதிநிதிகள் பாகிஸ்தான் கூறுவதற்கெல்லாம் தலையாட்டாமல், அதன் பின்னால் உள்ள குள்ளநரி தந்திரத்தை புரிந்து செயல்படுவதற்கான வாய்ப்பை நாம் அவர்களுக்கு அளித்துள்ளோம். அதே வேகத்தில், அவர்களும் ஐ.நா.,-வில் நம் உயரதிகாரிகளை கலந்தாலோசிக்கவும் வழி வகுத்துள்ளோம்.சுருக்கமாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் அடுத்த நகர்வுகளை எதிர்பார்த்தே, நம் அனைத்து கட்சி குழுக்கள் பயணம் செய்யும் நாடுகளை அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அதே சமயம், நம்மை சந்தேக கண்ணுடன் பார்த்திருந்து விட்டு, கடந்த 20 ஆண்டுகளாக நட்பு பாராட்டும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம் குழுக்கள் செல்லவில்லை.பாகிஸ்தான் தவிர்த்த நம் அண்டை நாடுகள் எதுவும் பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது அங்கம் வகிக்கவில்லை; வரும் காலத்தில் அந்த வாய்ப்பை பெறப்போவதும் இல்லை. கிள்ளுக்கீரை
என்றாலும், அண்டை வீட்டுக்காரன் அண்டை வீட்டுக்காரன் தான். அவனை பகைத்துக் கொண்டு நாம் எதுவும் சாதித்து விட முடியாது. நம்மை பொறுத்தவரையில் பூட்டான் மட்டுமே நம் நம்பிக்கைக்குரிய அண்டை நாடு. நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள் உள்நாட்டு அரசியலில் சிக்கித் தவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே, தற்போதைய உள்நாட்டு சூழலில், வங்கதேசம் நம்மை ஒரு எதிரி நாடு என்று கருதி செயல்படுகிறது; அது தனி கதை.தெற்கே, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அதனால், நம் கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த பின்னணியில், அண்டை நாடுகளுக்கு இந்திய துாது குழுக்கள் எதுவும் அனுப்பப்படாதது குறித்து, அங்குள்ள பத்திரிகைகளில் விமர்சன கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதாவது, தான் பெரிய நாடு என்பதை இந்தியா மீண்டும் தங்களுக்கு நினைவுறுத்துவதாகவும், தங்களை இந்தியா கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவும் அங்கு பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இதுவும் தவிர்த்திருக்கப்பட வேண்டிய விஷயமே - என்.சத்தியமூர்த்திசர்வதேச அரசியல் ஆய்வாளர்.