திருமூர்த்திமலை படகு சவாரி திட்டம்.. மண்ணோடு மண்ணாக! சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் இழுபறி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை சுற்றுலா மையத்தில், செயல்படாமல் முடங்கியுள்ள படகுத்துறை வீணாகி வருகிறது. சுற்றுலா மேம்பாட்டுத்திட்டங்கள் பல ஆண்டுகளாக இழுபறியாகி வருவதால், சுற்றுலா பயணியர் வருகையும் குறைந்து வருகிறது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, மாநில அளவில் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.மேற்கு மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருருந்து, 960 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் சுவாமி, அடர்ந்த வனப்பகுதியிலிருந்து, மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவி, மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மீன் வளர்ச்சிக்கழகத்தின் வண்ண மீன் பூங்கா என ஆன்மிகம் மற்றும் சுற்றுலா மையாக உள்ளது.திருமூர்த்தி மலைக்கு, ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து, பல லட்சம், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். படகு சவாரி துவக்கம்
திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில், 1990ல் படகு சவாரி துவக்கப்பட்டது. இங்கு, 15 பேர் பயணிக்கும் இரண்டு மோட்டார் படகுகள் மற்றும், 3 பெடலிங் படகுகள் இயங்கி வந்தது. அணையில் அழகான படகு துறை, இருக்கை வசதிகள் என அமைக்கப்பட்டது.மகளிர் சுய உதவி குழு வசம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில், 2002ல், திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மகளிர் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, படகுகள் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.படகு சவாரி வாயிலாக பெறப்பட்ட வருவாயில், தளி பேரூராட்சிக்கு, 25 சதவீதமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 75 சதவீதமும் என, பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது.எழில் மிகுந்த திருமூர்த்தி அணை மற்றும் பசுமையான மலைத்தொடரின் அழகை, படகுகளில் சென்று ரசிக்க சுற்றுலா பயணியர் அதிக ஆர்வம் காட்டினர். பராமரிப்பில் சிக்கல்
அதிகளவு சுற்றுலா பயணியரை கவர்ந்த படகு சவாரி, பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, 2012ல் நிறுத்தப்பட்டது.கடந்த, 12 ஆண்டுகளாக படகு சவாரி திட்டம் முடங்கிய நிலையில், மீண்டும் அதனை இயக்குவது குறித்து, தளி பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஆர்வம் காட்டாததால், படகுகள் மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட அனைத்தும் காட்சிப்பொருளாக மாறின.பராமரிப்பில்லாததால், படகு துறை சிதிலமடைந்தும், படகுகள் அனைத்தும், அணைக்கரையில், மண்ணோடு, மண்ணாக புதைந்து வீணாகியுள்ளது.பல லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டம், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக வீணாகியுள்ளதோடு, மலைவாழ் மக்கள் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.திருமூர்த்திமலை வரும் சுற்றுலா பயணியரும், ஏமாற்றத்துடன் செல்லும் அவல நிலை உள்ளது.எனவே, படகுத்துறையை புதுப்பித்து, புதிய படகுகளை வாங்கி, இயக்க வேண்டும். அதே போல், சுற்றுலா பயணியரை கவரும் வகையில், அணைப்பூங்கா, சிறுவர் பூங்கா, தீம் பார்க், பஸ் ஸ்டாண்ட், அருவிக்கு செல்லும் வழித்தடத்தில் இயற்கையான நிழல் வசதி, இருக்கை வசதிகள், குடிநீர், கழிப்பறை என சுற்றுலா சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் இல்லாததால், திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.எனவே, திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள், பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ள நிலையில், திட்ட அறிக்கை, மதிப்பீடு தயாரித்து அனைத்து திட்டங்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கி, திருமூர்த்திமலை சுற்றுலா மையத்தை மீண்டும் பொலிவு பெறச்செய்ய, சுற்றுலா வளர்ச்சித்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால், சுற்றுலா வளர்ச்சி பெறுவதோடு, இதனை நம்பியுள்ள வணிகர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்படும்.