உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சவால் விடும் திரிணமுல்; சமாளிக்குமா தேர்தல் கமிஷன்?

சவால் விடும் திரிணமுல்; சமாளிக்குமா தேர்தல் கமிஷன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் கமிஷனை எதிர்த்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்த வலியுறுத்தியும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 4ம் தேதி மிக பிரமாண்டமான பேரணி நடந்தது. எச்சரிக்கை 'இது வெறும் ஆரம்பம் தான். வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான வாக்காளர் ஒருவரது பெயரை நீக்கினால் கூட, டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலக வாசல் முன், லட்சம் பேர் திரண்டு போராட் டம் நடத்துவோம்' என, திரிணமுல் காங்., எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டிருக்கும் தேர்தல் கமிஷனுக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், அரசியல் சார்ந்த இந்த பிரச்னையை அப்படியே சூடு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறார் மம்தா. உண்மையான வங்காள வாக்காளர்களை நீக்குவதற்காக, கண்ணுக்கு தெரியாமல் மிக அமைதியான முறையில் இந்நடவடிக்கையை பா.ஜ., எடுத்திருப்பதாக மம்தா குற்றஞ் சாட்டுகிறார். 'மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு கோடி பேரின் பெயர்களை நீக்குவதே அவர்களது திட்டம். நீக்கப்பட்டவர்களை அகதிகள் முகாம்களுக்கோ அல்லது மீண்டும் வங்கதேசத்திற்கோ அனுப்பிவிட்டு, அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ., திட்டம் போடுகிறது' என்று, திரிணமுல் காங்., கூறி வருகிறது. அதாவது மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்கான உளவியல் ஆயுதத்தை திரிணமுல் கையில் எடுத்திருக்கிறது. போராட்டம் திரிணமுல் காங்., - எம்.பி.,யான பாலா தாக்குர், 'ஏழை வாக்காளர்கள், சிறுபான்மையினர் மற்றும் மத்துவாக்களை குறிவைத்தே தீவிர திருத்தப்பணி என்ற சதி அரங்கேற்றப்பட்டுள்ளது' என விமர்சித்துள்ளார். 'வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு மத்துவா பெயர் நீக்கப்பட்டால் கூட, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அதே சமயம், மத்தியில் ஆளும் பா.ஜ., இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்பட்டமாக மறுத்து வருகிறது. 'நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது அவசியமானது. தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடப்பதற்கு இது தேவை. 'தகுதியற்ற, சட்ட விரோத, போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, பா.ஜ., விளக்கம் அளிக்கிறது. 'தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியலில் போலியானவர்கள் இருக்கின்றனர் எனில், கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., எப்படி வெற்றி பெற்றது? இதே வாக்காளர் பட்டியல் தானே அப்போதும் இருந்தது. 'வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால் கூட மத்தியில் பா.ஜ., அரசின் வீழ்ச்சி ஆரம்பித்துவிடும்' என, மம்தா எச்சரிக்கிறார். மாநிலம் தழுவிய போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் திரிணமுல் காங்., சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. மிகப்பெரும் கேள்வி போதாக்குறைக்கு தேர்தல் கமிஷனின் பூத் அளவிலான அதிகாரிகளுக்கு இணையாக, தங்கள் கட்சியில் இருந்து, பூத் அளவிலான 84,000 முகவர்களை திரிணமுல் காங்., நியமித்திருக்கிறது. அதாவது, இவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகளின் நிழல் போல செயல்படுவர். வீடு வீடாக சென்று வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, இவர்கள் பின்தொடர்வர். வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையான பெயர் நீக்கத்தை தடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவர். அதே சமயம், பா.ஜ.,வும் இந்த விவகாரத்தில் உறுதியுடன் இருக்கிறது. திரிணமுலுக்கு போட்டியாக, பூத் அளவில் 50,000 முகவர்களை கட்சி சார்பில் நியமித்துள்ளது. ஊழல், வேலைவாய்ப்பின்மை, மோசமான சட்டம் - ஒழுங்கு போன்ற, மாநிலத்தின் உண்மையான பிரச்னைகளை திசைதிருப்பவே, மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வருகிறார் என பா.ஜ.,வும் தன் பங்குக்கு வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுடன் வாக்காளர் திருத்தப் பணியை ஒப்பிட்டு, வழக்கமான நிர்வாக நடவடிக்கையை, அரசியல் பிரச்னையாக திரிணமுல் மாற்றி இருக்கிறது. தேர்தல் கமிஷனின் ஒவ்வொரு நகர்வுக்கும் சவால் விடுத்து வருகிறது. பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் இந்த சவாலை முறியடிக்குமா என்பது தான், தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரும் கேள்வி. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

anantharaman
நவ 09, 2025 08:28

SIR அமல் படுத்தாத வரை மே.வங்காளத்தில் தேர்தல் நடக்காது என்று தே.ஆணையம் தீர்மானம் செய்து, அங்கு ஆட்சியை 5 ஆண்டு முடிந்ததும் கலைத்த பின் என்ன நடக்கும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை