'பாரத் காஸ்' நிறுவனம், உடனடியாக சமையல் எரிவாயு பெறும் வகையில், 'ஏ.டி.எம்., காஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், உடனடியாக புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுதலும், உடனடியாக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்புதலும் சாத்தியமாகிஉள்ளது.பாரத் காஸ் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர் சிரமத்தை குறைக்கும் வகையில், 24 மணி நேரமும் சமையல் எரிவாயு நிரப்பும் வகையில், ஏ.டி.எம்., காஸ் திட்டத்தை, 'பாரத் காஸ் இன்ஸ்டா' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பெங்களூரில், கடந்த வாரம் இதற்கான மையம் திறக்கப்பட்டுள்ளது.வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்., சென்று பணம் எடுப்பது போல, காலி சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பி வரலாம். புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதும் இதனால் எளிதாகியுள்ளது. இத்திட்டம், டில்லி, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய பகுதிகளிலும் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளியே தங்கியுள்ளவர்கள், அதிகம் பயன்பெற வாய்ப்புள்ளது. வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், இத்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சமையல் காஸ் ஏஜன்சி உரிமையாளர்கள் கூறுகையில், 'பாரத் காஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஏ.டி.எம்., - காஸ் திட்டம், வளர்ந்த நகரப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 'இத்திட்டத்தில், பிரத்யேகமாக சிறிய அளவிலான சிலிண்டர்களில் மட்டும் எரிவாயு நிரப்பப்படுகிறது.'ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி, சிலிண்டர்களில் எரிவாயு நிரப்புவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் இத்திட்டம் படிப்படியாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது' என்றனர்.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஏ.டி.எம்., மையத்தில் உள்ள மானிட்டரில், புதிய இணைப்பு அல்லது சிலிண்டரில் எரிவாயு நிரப்புதல் ஆகிய 'ஆப்சன்'களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 'ரீபிள்' பட்டனை அழுத்தியதும், காஸ் இணைப்பு எண்ணை பதிவு செய்தால், பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, நான்கு இலக்க ஓ.டி.பி., வரும்; அதை பதிவு செய்த பிறகு, எரிவாயு நிரப்புவதற்கான கட்டணத்தை, அதே மெஷினில் ஆன்லைன் வாயிலாக செலுத்தலாம். பிறகு, காலி சிலிண்டரை மிஷின் அருகே வைத்து, நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யலாம். பிறகு, அருகே உள்ள சிறிய கதவை திறந்து, சிலிண்டரை சரியாக வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் காஸ் நிரப்பியதும், மற்றொரு கதவை திறந்து, மூடி முத்திரையிடப்பட்ட சிலிண்டரை எடுத்துச் செல்லலாம். - நமது நிருபர் -