உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க., மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவூட்டிய விஜய்!

 தி.மு.க., மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவூட்டிய விஜய்!

சென்னை : ''தி.மு.க.,வின் போலி பிம்பத்தையும், போலி 'பிராண்ட்'டையும் உடைப்போம்,'' என, முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார். சட்டசபையில் நேற்று, காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர், சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் காட்டி, முந்தைய தி.மு.க., அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பெண்களே காரணம்

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். அதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே, 40 நிமிடங்கள் ஆவேசமாக முதல்வர் விஜய் பேசியதாவது: அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை வைக்கலாம்; அவற்றை மக்கள் பார்த்துக் கொள்வர். ஆனால், தனிப்பட்ட நபர்களை, பெண்களை தரந்தாழ்ந்து பேச வேண்டாம். சமீப காலமாக, தமிழகத்தில் ஆபாச நதி, வன்ம நதி ஓடிக் கொண்டிருக்கிறது. பெண்களை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுவதை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். நம் வீட்டில் தாயாக, அக்கா, தங்கையாக இருப்பதும் அதே பெண்கள் தான். இதை மனதில் கொண்டு பேச வேண்டும். நான் இந்த நிலைக்கு வர பெண்களே காரணம். எனவே, பெண்களை அவதுாறாக பேசினால், சட்டம் தன் கடமையை செய்யும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நான் பேசவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இதே சட்டசபையில், இதே எதிர்க்கட்சியால் அவமானங்களை சந்தித்துள்ளார் என்பதை கேள்விப்பட்டு உள்ளோம். எதிர்காலத்தில் இதுபோல எந்தப் பெண்ணுக்கும் நடந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

எதற்காக அரசியல்

சில நாட்களுக்கு முன் ஒரு எம்.எல்.ஏ., சட்டசபைக்கு உள்ளேயே, 'எலும்பை உடைப்பேன்' என, எலும்பு சிகிச்சை நிபுணர் போல பேசியுள்ளார். தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது' என்றார். இவ்வளவு காலமாக தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டது, அதே மக்கள் தான். இப்படி பேசி பேசித் தான் எதிர்க்கட்சியாக இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பை ஏற்க மனம் இல்லாதவர்கள், எதற்காக அரசியலில் இருக்க வேண்டும்? ஆபாச நதி, வன்ம நதி ஓடும் வகையில் பேசியதை, அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், நாங்கள் பேசாத பேச்சா என்று நியாயப்படுத்துகின்றனர். இது தவறு என்பதையே அவர்கள் உணரவில்லை. கவிஞர் கண்ணதாசன், 'பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' என, சொல்லியிருக்கிறார். அது தான் தி.மு.க., த.வெ.க., யாருடைய தனிப்பட்ட அடையாளமாகவும் இருக்காது. தமிழ், தமிழர், தமிழ்நாடு தான் எங்கள் அடையாளம். 'மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்; தம் மக்கள் நலம் என்றே தான் கருத்தில் கொள்வர்' என்பது, எம்.ஜி.ஆர்., படப்பாடல். அதை மாற்றிச் சொல்கிறேன். 'மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம்; தமிழக மக்கள் நலம் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம்' என்பது தான் எங்கள் கொள்கை. அதனால் தான், 'மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்' என்று கூறினோம். தி.மு.க., ஆட்சியில், 1970களில் வீராணம் திட்டத்தில், 'டெண்டர்' வேண்டுமானால், 2.5 சதவீதம் கமிஷன் கேட்டதாகவும், ஏழு தவணைகளில் 29 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்றைய முதல்வர் கருணாநிதி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்

கடந்த 2021 - 2026 வரையிலான தி.மு.க., ஆட்சியில், 7.5 - 10 சதவீதம் வரை கட்சி நிதி வசூலிக்கப்பட்டது பற்றி, அமலாக்கத்துறை அறிக்கையில் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளது. அன்றைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் அதன் நேரடி பயனாளர்கள் என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. தி.மு.க., மேடைகளில், 'தி.மு.க., இருக்கும் இடத்தில் தவறு இருக்காது' என்பர். ஆனால், தி.மு.க., இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும்; தவறு நடக்கும் இடத்தில் தான் தி.மு.க., இருக்கும். சரியாக, ஒழுங்காக விஞ்ஞான முறையில் அவர்கள் தவறுகள் செய்துள்ளனர். தி.மு.க., ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால், 'ஆதாரம் கொடுங்கள்' என்று தான் கேட்பரே தவிர, நாங்கள் இதுவரை ஊழல் செய்ததில்லை என்று சொல்ல மாட்டார்கள்; ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பர். தி.மு.க., எவ்வளவு அவதுாறு பேசினாலும், நாங்கள் அவ்வளவு கீழே போய் பேச மாட்டோம். ஆனால், அரை நுாற்றாண்டுக்கு கீழே சென்று, ஆழமாக தோண்டித் துருவி, மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வின் போலி பிம்பத்தையும், போலி 'பிராண்ட்'டையும் உடைப்போம். இதை எச் சரிக்கையாக அல்ல; அன்பாக சொல்லிக் கொள்கிறோம். கடந்த 1967ல் அண்ணாதுரை, 1977ல் எம்.ஜி.ஆர்., 1982ல் என்.டி.ராம ராவ், 2026ல் விஜய் என்று சொல்லிக் கொள்கிறேன். இறைவனும் இயற்கையும், மக்களும் எப்போதும் எங்கள் பக்கம் தான் இருப்பர். அதனால், யார் என்ன செய்தாலும் எடுபடாது. மக்களின் அன்புக்கு முன், தி.மு.க., தோற்பது உறுதி. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே வந்திருக்கிறேன். கடந்த 2021 - 2026 ஆட்சியில் குற்றங்களில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ஆதரவாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லை. பல வழக்குகளில் எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக்கிய பின்னரே, முதல் தகவல் அறிக்கை பதிவு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது, வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வு, செயல்பாடுகளால் பதிலளித்து வருகிறோம். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆளுங்கட்சியினராக இருந்தாலும் குற்றச்சாட்டு எழுந்தால், வழக்குப்பதிவு செய்துள்ளோம்; தேவையான இடங்களில் கைது செய்து, கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடு

தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, அமலாக்கத்துறை அறிக்கையில் உள்ளது. டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்தவருடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்தீஷ் என்பவர் தீர்மானித்துள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரே, ரத்தீஷ் உத்தரவில் தான் செயல்பட்டுள்ளார். யார் இந்த ரத்தீஷ்? த.வெ.க., அரசு அமைந்ததும், அவர் துபாயில் ஒளிந்து கொண்டுள்ளார். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரும் டாஸ்மாக் டெண்டரில் தலையிட்டுள்ளார். தி.மு.க.,வில் எதை, எப்போது செய்தாலும் குடும்பமாக சேர்ந்து செய்வர். அதனால் அவர்களை, 'கரூர் கேங்' என, அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -விஜய், முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அருண், சென்னை
செப் 08, 2026 23:18

எல்லாம் இருக்கட்டும், 120 நாட்களாக இவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? சும்மா ஒரு நாள்ல போல இப்படி வாக்குவாதம் நடக்குது,. மக்கள் வரிப்பணம் வேஸ்ட்... திமுக ஊழல் பார்ட்டிதானென்னு உங்கள மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்... தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள்தான் மக்கள் குறைகளைப்பற்றி, தொகுதிபற்றி பேசுகிறார்கள், மற்றபடி waste


Manasachu -Tamil Nadu Indian
செப் 08, 2026 22:36

பழைய செய்திகளை தேவையில்லாமல் இப்போது பேசி சட்டசபை நேரத்தை வீணடிப்பது ஏன்? நீங்கள் ஆட்சிக்கு வந்தது முந்தைய ஆட்சியை குறைகூறிதானே இப்போது மீண்டும் அதே குறையை கூறி சட்டசபையின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் , தமிழ்நாட்டுக்கு முன்னேற்றத்திற்கான திட்டங்களை ஏன் பேசமாட்டிர்கள் . இது வெற்றி கலகமா அல்லது வெட்டி கழகமா ?


K.n. Dhasarathan
செப் 08, 2026 21:45

சர்க்காரியா கமிஷன் பற்றி யாரும் பேசக்கூடாது, குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால் அர்த்தம் தெரியுமா ? மறுபடி பேசினால் கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயும் .


ஆரூர் ரங்
செப் 08, 2026 21:59

சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ பதிந்த மூன்று வழக்குகளையும் கருணாநிதி கூட்டணி (அ)தர்மத்திற்காக வாபஸ் வாங்கினது இந்திரா காங்கிரஸ் அரசு. இப்போ அவங்க விசில் கூட்டணியிலேயே இருக்காங்க.


manian
செப் 08, 2026 18:07

yes dmk's dark pages reread


Prem Kumar
செப் 08, 2026 17:41

தமிழக சட்டசபையில் நேற்று திமுக மீது முதல்வர் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முன்பே விரிவாக பலமுறை சபையில் விவாதிகபட்டு அனைத்துமே அவை குறிப்புகளிலும் பதிவாகி இருக்கிறது என்பது சபாநாயகர் இன்று கூறிய தகவல் மூலம் உறுதியாகி இருக்கிறது. எனவே இவை ஊடகங்களிலும் அப்போதே விரிவாகவும் வெளியாகி அனைவருமே அறிந்த விஷயங்களையே மீண்டும் முதல்வர் சபையில் பேசி ஏன் அவையின் 61 நிமிடங்களை வீண் அடித்தார் என மக்கள் யோசித்தால் தவறில்லையே. சட்டசபை என்பது மாநில மக்களால் தேர்வான பல்வேறு கட்சி உறுப்பினர்களும் மக்களுக்காக விவாதிக்க கூடும் ஒரு மக்கள் மன்றம். ஆனால் திமுகவும் தவெகவும் மக்கள் ஏதோ தங்களது இரண்டு கட்சிகளுக்குள் இருக்கும் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்த அவர்களது கட்சி உறுப்பினர்களை மட்டுமே அனுப்பி இருக்கும் சபையாக மாற்றி அவர்கள் சவுகரியப்படி அவையை நடத்தி வருகிறார் கள். இது ஆரோக்கியமான செயல் இல்லை.பல மாண்புகள் அலங்கரித்த சபையையும் இப்போது இவர்களை தேர்ந்தெடுத்த மக்களையும் தயவுசெய்து மதிக்க வேண்டும்.


Ms Mahadevan Mahadevan
செப் 08, 2026 17:30

ஜோசப் விஜய் வெறும் பயனற்ற வெட்டி பேச்சு பேசி நேரத்தை பணத்தை வீணடிக்கிறரார்.


spr
செப் 08, 2026 16:18

திமுக அன்றிலிருந்து இன்றுவரை மத்திய அரசின் ஆதரவுடன் குற்றங்களில் தண்டனை பெறுவதிலிருந்து தப்பித்து வருகிறது அதற்கு மத்திய அரசின் விசாரணை அதிகாரிகளும் மத்திய அரசின் அனுமதியின் பேரில் முறையான சாட்சியங்களைக் காலத்தில் நீதிமன்றங்கள் முன் நிறுத்தாமல் அதை ஒரு காரணம் காட்டி நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்காமல் காக்க உதவுகிறார்கள். ""1977- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய தினங்களில் சமர்ப்பிக்கப்பட்ட தனது முதல் அறிக்கையில், சர்க்காரியா விசாரணை ஆணையம் தான் விசாரித்த ஏழு குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச்சாட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் நிலையில் இருந்த இந்திரா காந்தி அரசு, கருணாநிதி மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது." என என். ராம் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்." உண்மை என்னவென்றால், 28 குற்றச்சாட்டுகள் விசாரணை வரம்பில் இருந்தன. அதில் 7 குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல் கட்டத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த 7-ல் 6 குற்றச்சாட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிரூபிக்கப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. மீதமிருந்த 21 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடர வேண்டிய நிலை இருந்தது.” 1980-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், திமுக இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. திமுக - இந்தியா காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை பெற்றதோடு, மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது. இதன் பின்னர் சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை மீதான விசாரணை தொய்வடைந்தது. இந்தக் காலகட்டத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களையோ அல்லது உறுதியான சாட்சியங்களையோ வழக்கம் போல, மத்திய அரசுத் தரப்பு சிபிஐ நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் விளைவாக, சிறப்பு நீதிமன்றங்களில் திமுக மீது போடப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டு இறுதியாகக் கைவிடப்பட்டன. இன்றைய அமுலாக்கத்துறையும் மத்திய அரசுக்கு ராஜ்ய சபையில் தேவையான உறுப்பினர் இல்லாத காரணத்தால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட ஆதரவு வேண்டி திமுகவை நம்புகிறது மோடியின் கட்டுப்பாட்டால் விசாரணை அமைப்புக்கள் வழக்கை நீர்த்துப்பி போக்க வைக்கின்றன அதனால் திமுக தலைவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிக்கிறார்கள் குற்றவாளி என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி Stay மட்டுமே வைத்துள்ளது அவரை முற்றிலும் நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவிக்கவில்லை Acquit. தமிழக ஆளுநரும் சுட்டிக்காட்டி, “The Supreme Court had only suspended the conviction, not set it aside.” எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தெளிவாகக் கூறிய விஜய் பாராட்டப்பட வேண்டியவர். ஒருவர் வாரிசுகள் வழக்காட இருக்கும்வரை, அவர் இறந்தாரென்பதற்காக அவர் செய்த குற்றத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர் இறந்துவிட்டாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் இல்லாமல் போய்விடாது. குற்றங்களைச் சுட்டிக்காட்டுவது பாதிக்கப்பட்ட நபர்களின் பக்கமுள்ள நியாயத்தை உறுதிப்படுத்துகிறது.


Siva
செப் 08, 2026 13:42

Even JJ also talks about the same Sarkarria Commission ges. Our CM have guts take action against DMK based on sarkarria commission? You cant do then why you spoke about that?


Chandrasekaran S
செப் 08, 2026 13:21

People wants know the action taken by this government against corruption, theft, rapes, rowdism etc. They are well aware of the past history of corruption


baala
செப் 08, 2026 12:55

குப்பைகள்


புதிய வீடியோ