சென்னை: ''தெரு நாய்கள் விவகாரத்தில் விஷயம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள், இன்று கழுதைகள் எல்லாம் காணாமல் போய் விட்டனவே; அவற்றை காணோமே என கவலை கொள்வது உண்டா,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பினார். அவர் அளித்த பேட்டி:
பீஹாரில் வாக்காளர் பட்டியல் குளறுபடி பிரச்னையை கண்டித்து நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடியின் தாயை அவமதிக்கும் வகையில் பேசியதாக சொல்கின்றனர். யாரையும் அவமானப்படுத்தும் வகையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் இதெல்லாம் நாகரிகமும் இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் காணாமல் போவது என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை பலமுறை நானே கூறியிருக்கிறேன். என் பெயரே காணாமல் போய் இருக்கிறது. ஆனால், பெயர் காணாமல் போனது என்பதற்காக, பெரிதாக வருத்தப்பட தேவையில்லை. பெயரை சேர்க்க வேண்டும் என்றால், மிக எளிதாக சேர்த்துக் கொள்ளலாம். நாட்டில் தெரு நாய்கள் தொல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது வெகு சுலபம். அதற்காக, யாரும் பெரிதாக சிந்தித்து எதையும் செய்ய வேண்டியதில்லை. தெரு நாய்கள் விவகாரத்தில் விஷயம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள், இன்று கழுதைகள் எல்லாம் காணாமல் போய் விட்டனவே; அவற்றை காணோம் என யாராவது கவலை கொள்வது உண்டா? நமக்காக எவ்வளவு பொதிகள் சுமந்துள்ளன கழுதைகள். இப்போது கழுதைகளை பார்க்கவே முடியவில்லை. கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகின்றனரா; எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். கழுதைகளுக்கென்று தனி வரலாறு உள்ளது. கழுதையின் பெருமையை ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும்; அதை பேச வேண்டும். ஒருவர் நல்லது செய்தால், எந்த கட்சி என்று நான் பார்ப்பது கிடையாது. நாட்டுக்கு நல்லது செய்தால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். நாட்டுக்கு முதல்வர் நன்மையை செய்திருக்கிறார்; அதை ஏற்றுக் கொள்கிறோம். நாளை பா.ஜ., நல்லது செய்தால், அதையும் ஏற்றுக் கொள்ளலாம். முதல்வர் வெளிநாட்டுக்கு முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக சென்றுள்ளார்; அது வரவேற்கத்தக்கது தான். தொழில் வளர்ச்சி பெருக, தொழில் முதலீடுகள் அவசியம் தேவை. அதை செய்யவே முதல்வர் முயல்கிறார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பற்றி, நான் கட்டுரை எழுதி இருக்கிறேன். அதற்கு மேல் நான் கருத்து கூறி, நான் எழுதிய கட்டுரையை நானே குழப்பி விட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.