உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வறுமை இல்லாத மாநிலமாக மாற தமிழக அரசு என்ன செய்யணும்?

வறுமை இல்லாத மாநிலமாக மாற தமிழக அரசு என்ன செய்யணும்?

கேரள அரசு, தங்கள் மாநிலத்தை தீவிர வறுமை இல்லாத, மாநிலமாக அறிவித்துள்ளது. கேரளா போன்று வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற, தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்.

'வேலை வாய்ப்பு முக்கியம்'

வறுமையை நிரந்தரமாக ஒழிக்க, வேலை வாய்ப்பு உருவாக்கம் முக்கியம். தமிழகத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மையங்களை, கிராமப்புறம் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கான ஸ்டார்ட் அப் வில்லேஜ் திட்டங்களை, மேலும் வலுப்படுத்த வேண்டும். - முத்துராமன் சுக்கிரவார்பேட்டை.

'கல்வியில் கவனம் தேவை'

கேரளா போல், தமிழகமும் மக்கள் பங்கேற்புடன் மாவட்ட, நகராட்சி திட்டங்களை உருவாக்கலாம். கல்வியை அடிப்படை உரிமையாக கருதிய கேரளா, எழுத்தறிவு மாநிலமாக திகழ்கிறது. அதேபோல், தமிழகத்தில் அரசு பள்ளி வசதிகள், ஆசிரியர் பயிற்சி, தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவு கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தல் அவசியம். -கிருஷ்ணதாஸ் ஜோதிபுரம்.

'போதையிலிருந்து மீளணும்'

தமிழகத்தில் லஞ்சம், லாவண்யம் அதிகம். எந்த வேலைக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் சமயத்தில் இலவசங்கள் வேறு. சம்பாதிக்கும் பணத்தை மதுக்கடைகளுக்கு வாரி கொடுக்கும் 'குடி'மகன்களால் குடும்பத்துக்கு கேடு ஏற்படுகிறது. பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். போதையில் இருந்து தமிழகம் மீண்டால் வறுமை தானாகவே ஒழிந்துவிடும். -அமர்குமார் காட்டூர்.

'ஹிந்தி கற்கணும்'

கேரள மக்கள் தாய் மொழி மீது பற்று கொண்டாலும், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளையும் கற்றுக்கொள்கின்றனர். மொழி அறிவால் வெளிநாடுகளுக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். தமிழகத்திலோ, மொழி அரசியல் நடக்கிறது. வேறு மொழி கற்க முடியாதவர்கள், வெளியூர் சென்று தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மொழி அரசியலை கைவிட வேண்டும். -சூரஜ் கணபதி.

'கிடைக்கும் ஊரில் வேலை'

கேரளாவில் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என, யாரும் வீட்டில் இருப்பதில்லை. கிடைக்கும் ஊருக்கு சென்று வேலை செய்கின்றனர். வெளிநாடுகளில் பலர் வேலை செய்கின்றனர். சம்பாதிக்கும் பணத்தை கேரளாவில்தான் முதலீடு செய்வார்கள். தமிழகத்தில் அரசு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால், கேரளா போல் மாறலாம். - நாகூர் மீரான் காட்டூர்.

'இலவசம் ஒழியணும்'

கேரளாவில் உள்ளவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். மூன்று மொழி தெரியும். இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் வேலை கிடைக்கும். அங்கு வறுமைஇல்லாமைக்கு, மக்கள் தொகை குறைவாக இருப்பதும் ஒரு காரணம். தமிழகத்தில் வேலை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். தமிழக அரசு இலவசங்களை அதிகம் கொடுப்பதால், இங்கு வறுமை ஒழிய வாய்ப்பு இல்லை. - ராஜேந்திரன் வரதராஜபுரம்.

'இயற்கைக்கு முக்கியத்துவம்'

கேரள அரசு, இயற்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாமும் கொடுக்க வேண்டும். அரசு அலுவலக செயல்பாடுகள், திட்டங்களை டிஜிட்டல்மயமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் சரி; இலவசங்களை விட்டுவிட்டு மருத்துவம், கல்விக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தினாலே வறுமை இருக்காது. -பெனால்டு மணியகாரம் பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R Dhasarathan
நவ 03, 2025 09:32

R&D ஊக்கப்படுத்த வேண்டும். நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும். சிறு குறு நிறுவனங்களை கண்கானித்து அவர்கள் முன்னேற அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும்.


அப்பாவி
நவ 03, 2025 09:15

வறுமை எங்கே இருக்கு? எல்லோரும் ஆனந்தமா இருக்காங்க...


govind
நவ 03, 2025 09:07

லஞ்சம் ஊழல் இலவசங்கள் இல்லையென்றால் தமிழகம் அல்ல அனைத்தும் சொர்க்க பூமி ஆகிவிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை