ஜல்லிக்கட்டு அரங்கத்தை யார் கேட்டது? தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் சண்முகம் கேள்வி
மதுரை: “ஆண்டுக்கு ஒரு நாள் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 100 கோடி ரூபாய் செலவு செய்து அலங்காநல்லுாரில் அரங்கம் கட்டிய தமிழக அரசுக்கு, அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க, 50 கோடி ரூபாய் ஒதுக்க முடியாதா?” என, மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் கேள்வி எழுப்பினார்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் சார்பில் அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற சண்முகம் பேசியதாவது: இந்த சர்க்கரை ஆலையை திறக்க, வேளாண் அமைச்சர் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வற்புறுத்திய போது, 'அரவைக்கு போதிய கரும்புகள் இல்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆலையே மூடி கிடக்கும் போது யார் கரும்பு பயிரிடுவர்?நிர்வாக கோளாறு, ஊழல், ஊதாரித்தனம், நவீனப்படுத்தாதது போன்ற காரணங்களால் தான் சர்க்கரை ஆலைகள் மூடப்படுகிறதே தவிர, விவசாயிகள் கடுகளவு கூட காரணமாக இருக்கவில்லை. ஆலை மூடப்பட்டதற்கும், வருமானம் இல்லாமல் போனதற்கும், நஷ்டத்தில் இயங்கியதற்கும் யார் காரணம் என்பதை விசாரணை கமிஷன் அமைத்து அரசு கண்டுபிடிக்கட்டும். விசாரணை கமிஷனில் பிடிபடுவது எல்லாமே அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும் தான் என்பதால், கண்டுபிடித்தாலும் வெளியில் சொல்ல மாட்டீர்கள்.அலங்காநல்லுார் வாடிவாசலில் மாடுகள் நன்றாகத்தானே ஓடிக் கொண்டிருந்தன. இங்கிருந்து, 6 கி.மீ., துாரத்தில் ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்க வேண்டும் என, யாரும் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. உங்கள் பெருமையை பீற்றிக்கொள்ள அநியாயமாக, 100 கோடி ரூபாயை அங்கே செலவழித்தீர்கள். கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக, அலங்காநல்லுார் ஆலையை திறந்து நவீனப்படுத்துவதற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்க முடியவில்லையா?மதுரையைச் சுற்றியுள்ள மூன்று தனியார் ஆலைகளுக்கு கரும்பை அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன், அலங்காநல்லுார் ஆலையை திறக்காமல் அரசு மூடி வைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த ஆலை அலங்காநல்லுாருக்கு பெருமை. எக்காரணம் கொண்டும் தனியாருக்கு தாரை வார்ப்பதை விவசாயிகள் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.