பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் கர்நாடக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பேச்சு அடிபட ஆரம்பித்து உள்ளது. இது தவிர ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு 12 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியதும் தெரியவந்துள்ளது.கர்நாடக வீட்டுவசதி கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் மகள் ரன்யா ராவ், 33. நடிகை. துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில், கடந்த 3ம் தேதி இரவு ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.அவர் வீட்டில் இருந்து மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தது தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலின்படி, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து உள்ளது. விமான நிறுவனம்
டில்லி, பெங்களூரு விமான நிலைய ஊழியர்களிடம், இரு விசாரணை அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கக் கட்டிகளை, கமிஷன் பணத்திற்காக ரன்யா ராவ் கடத்தி வந்தது தெரியவந்து உள்ளது. ஆனால், அவரை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை, கண்டறியும் பணியில் விசாரணை அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பெங்களூரில் சில நகைக் கடைகளின் உரிமையாளர்களையும், விசாரணை அமைப்புகள், தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர். ரன்யா ராவ், அடிக்கடி துபாய்க்கு பயணம் செய்த, விமான நிறுவனத்திடமும் விசாரிக்க உள்ளனர். ரன்யா ராவ் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, சில நகை கடைகளின் உரிமையாளர்களே தகவல் கொடுத்து இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.ரன்யா ராவ் கைது செய்யப்பட்டவுடன், அவர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வரின் சட்ட ஆலோசகரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., பொன்னண்ணா கூறி இருந்தார். பதவிக்கு ஆபத்து?
ஆனால், ரன்யா ராவை காப்பாற்றும் முயற்சியில், அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரன்யா ராவின் கணவர் ஜதின், முக்கிய அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஆவார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஜதின் - ரன்யா ராவுக்கு நடந்த திருமணத்திலும், அமைச்சர்கள் சிலர் பங்கேற்று இருந்தனர். இதன்மூலம் சில அமைச்சர்களுடன், ரன்யா ராவுக்கு நல்ல அறிமுகம் இருந்து உள்ளது.குறிப்பாக ஒரு அமைச்சரை, ரன்யா அடிக்கடி சந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தங்கம் கடத்தலில் அந்த அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதா என்றும், ஒருவேளை உண்மை என்றால் அந்த அமைச்சர் பதவி பறிபோவதுடன், கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த அமைச்சர் நடுக்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொழிற்பேட்டை
இதற்கிடையில், ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, கர்நாடக அரசு 12 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது, துமகூரின் சிரா தொழிற்பேட்டையில், 'க்சிரோடா இந்தியா பிரைவேட்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில், ரன்யா ராவும் ஒருவர். இந்த நிறுவனம் சார்பில் இரும்பு தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு, 2023ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி, கர்நாடக அரசின் தொழில் துறைக்கு உட்பட்ட கர்நாடக தொழில் பகுதி வளர்ச்சி ஆணையம், பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்றும், விசாரணை நடக்கிறது. சி.பி.ஐ., நடத்தும் விசாரணை குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறுகையில், ''ரன்யா ராவ் தங்கக்கட்டி கடத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிப்பது பற்றி ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். வருவாய் புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரிக்கலாம். ஆனால், எங்களிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை,'' என்றார்.