உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அன்புமணியை நீக்காதது ஏன்? பா.ம.க., ராமதாஸ் புது விளக்கம்

அன்புமணியை நீக்காதது ஏன்? பா.ம.க., ராமதாஸ் புது விளக்கம்

சென்னை: ''அன்புமணி மீது நடவடிக்கை எடுத்தால், நான் வளர்த்த கட்சியை, நானே அழித்தது போன்றதாகி விடும்,'' என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி: 'பா.ம.க.,வுக்கு தற்போது அங்கீகாரமும் இல்லை; சின்னமும் இல்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும், நான் தலைமையேற்று தீர்மானிப்பேன்' என கூறினேன். அதை ஏற்க அன்புமணிக்கு மனமில்லை; பிடிவாதமாக இருக்கிறார். கட்சி நிர்வாகிகளை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் என்னிடம்தான் இருக்க வேண்டும். இதுதான் கட்சிக்கு நல்லது. அன்புமணியிடம் கட்சியை கொடுத்து விட்டு, 'டம்மி'யாக இருக்க என்னால் முடியாது. அவருடன் பேச நான் தயாராகத்தான் இருந்தேன். ஆனால், அவர் தைலாபுரம் வந்து, அவருடைய அம்மாவை மட்டும் பார்த்து செல்கிறார். ஆனால், பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அன்புமணியின் மூன்றாண்டு கால தலைவர் பதவிக்கான காலம், கடந்த ஜூன் மாதத்தோடு முடிந்து விட்டது. இப்போது, பா.ம.க.,வுக்கு நிறுவனரும், தலைவரும் நான்தான். என்னை குலதெய்வமாக, கடவுளாக நினைக்கும் பா.ம.க., பொறுப்பாளர்களுக்கு பணத்தை கொடுத்து, தன் பக்கம் அன்புமணி இழுத்து வருகிறார். அன்புமணியை தர்மபுரியில் எம்.பி.,யாக்கியதில் இருந்து, எனக்கு தெரியாமல், கட்சி பொறுப்பாளர்களை தன் பக்கம் இழுக்கும் உள்ளடி வேலைகளை செய்து வந்திருக்கிறார் என்பதை, கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிந்து கொண்டேன். பா.ம.க., எனும் ஆலமரத்தை தண்ணீருக்கு பதிலாக, வியர்வையை ஊற்றி வளர்த்தேன். அந்த ஆலமரத்தின் ஒரு கிளையை வெட்டி, கோடாரி செய்து, அதைக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கின்றனர். கட்சி நலன், வளர்ச்சிக்காக எதை சொன்னாலும், அன்புமணி கேட்பதில்லை. அவர் மீது நான் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் வளர்த்த கட்சியை, நானே அழிப்பது போன்றதாகி விடும். கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்களை அதல பாதாளத்தில், அவர் தள்ளி விடுவார். அதனால்தான், அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தேன். என் மீது உயிரையே வைத்திருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர், என்னை சந்திக்க வருவதாக இருந்தார். தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், அவரிடம் 5,000 ரூபாய் கொடுத்து, ராமதாசை சந்திக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். அதை வாங்காமல், அவர் என்னை வந்து சந்தித்தார். என்னை சந்திக்க வருபவர்களை தடுக்க, பணம் கொடுக்கின்றனர். 16 ஆண்டுகள் பொதுச்செயலராக இருந்த வடிவேல் ராவணனை அழைத்து, பழைய 'இன்னோவா' காரை கொடுத்து, தன் பக்கம் வளைத்து விட்டனர். அவர் ஏமாந்து விட்டார். அவருக்கு புது கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம். அன்புமணியின் மாமனாரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து, நடந்த சம்பவங்களை ஒரு மணி நேரம் எடுத்துக் கூறினேன். அதன்பின், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதேபோல, அன்புமணியின் மைத்துனரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான விஷ்ணு பிரசாத்தை, நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நேரில் வாருங்கள், பேச வேண்டும்' என்றேன். வருகிறேன் என்று சொன்னவரிடம் இருந்து, மரியாதை நிமித்தமாக கூட பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'எனக்கு தெரியாமல் முகவரியை மாற்றி விட்டார்'

பா.ம.க.,வின் தலைமை அலுவலகம், சென்னை, தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் தான் இருந்தது. எனக்கு தெரியாமல், கட்சி தலைமை அலுவலகத்தை, தி.நகர் திலக் தெருவுக்கு அன்புமணி மாற்றியுள்ளார். கட்சி தலைமை அலுவலகத்தை, தைலாபுரம் தோட்டத்திற்கு மாற்ற, சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை, தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. ஆனால், பொய்யான தகவலை கூறி, பொறுப்பாளர்களுக்கு ஆசை காட்டுகின்றனர். அன்புமணியிடம் சென்ற மவட்டச் செயலர்கள், மீண்டும் என்னிடம் வர ஆசைப்படுகின்றனர். அவர்கள் வந்தால், ஏற்றுக் கொள்வேன். - ராமதாஸ்

தி.மு.க., அமைச்சர்கள் உதவி?

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் 10ம் தேதி பா.ம.க., மகளிர் மாநாட்டுக்கு ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ளார்; அதில், தன் பலத்தை காட்டும் வகையில், '5 லட்சம் பேர் பங்கேற்பர்' என, தெரிவித்து உள்ளார். மாநாடு ஏற்பாடுகளில், பா.ம.க., கவுரவ தலைவர் மணி, அருள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சியினர் மாநாடு நடத்த அனுமதி கேட்டால், அலைக்கழிக்கும் காவல் துறை, மணி தலைமையிலான பா.ம.க., மகளிர் மாநாட்டு குழுவை அழைத்து, மாநாட்டுக்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணியில், தி.மு.க., தலைமையின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அன்புமணி ஆதரவாளர்கள் கூறுகையில், 'ராமதாஸ் பலத்தை காட்டுவதற்கு, தி.மு.க., முக்கிய அமைச்சர்கள் சிலர், மகளிர் மாநாட்டிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகின்றனர். ராமதாஸ் பக்கம் உள்ள பா.ம.க., முக்கிய பிரமுகர் வழியாக, இவை அனைத்தும் நடக்கிறது' என்றனர்.

நாளை பொதுக்குழு அன்புமணி திட்டவட்டம்

பா.ம.க., பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கும், பொதுச்செயலர் வடிவேல் ராவணனுக்கும் உள்ளது. அவர்கள் இருவரும் தான், நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே, இது சட்டப்படியான பொதுக்குழு. மாமல்லபுரத்தில், பா.ம.க., பொதுக்குழுவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பொதுக்குழுவுக்கு தடை கேட்டு, ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம். பா.ம.க.,வின் சட்ட விதிகள் மிக தெளிவாக உள்ளன. அவை எங்களுக்கு சாதகமாகவே உள்ளன. அந்த சட்ட விதிகள், எதை சுட்டிக்காட்டுகின்றன என்பதை நீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். எங்களுக்கான உரிமையை நீதிமன்றம் வாயிலாக நிலை நாட்டுவோம். இருந்தபோதும், கட்சி பிரச்னைகள் சுமுகமாக தீரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பாலு, செய்தி தொடர்பாளர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M Ramachandran
ஆக 08, 2025 22:11

மருத்துவர் ராமதாசு அவர்களே உங்களுக்கு வயது மூப்பினால் தள்ளாமை வந்துடிச்சி மகனுக்கும் வயது ஏறி முதிர்ச்சி வந்திருக்கும் அவர் பொறுப்பாக பார்க்கட்டுமே. தீ மு க்கா விலும் கருணாநிதி ஸ்டாலினை தலைவராக்கி உச்சிமுகர்ந்து மகிழ்ந்தாரே. ஸ்டாலினினும் தன் அன்பு மகனை உச்சியை முகர்ந்து தலைவராக்க தயாராகி கொண்டு வருகிறாரே. அது போல் நீங்களும் உங்க தமயனை உச்சிமுகர்ந்து தலைவராகி இருந்தால் பிரச்சனிய்ய ஏது. நீங்க கவுரவ தலைவராக இருந்து வழி நடத்த வேண்டியது தானே? பின் எதற்கு பிணக்கு?


Dv Nanru
ஆக 08, 2025 19:35

பா.ம.க.,வுக்கு நிறுவனரும், தலைவரும் நான்தான். என்னை குலதெய்வமாக, கடவுளாக நினைக்கும் பா.ம.க., பொறுப்பாளர்களுக்கு பணத்தை கொடுத்து, தன் பக்கம் அன்புமணி இழுத்து வருகிறார்.பணம் எங்கிருந்து வந்தது கடவுளுக்கு தான் தெரியும் ...


panneer selvam
ஆக 08, 2025 16:07

As per Ramdass statement of today , virtually all PMK members are saleable .


Arul. K
ஆக 08, 2025 14:01

கட்சியை ஓசியில் இப்படியும் விளம்பரம் செய்யலாம் போல


கல்யாணராமன் சு.
ஆக 08, 2025 12:43

பெரிய மருத்துவரய்யா நெசமாலுமே ஒரு பாவப்பட்ட நெலைமைக்கு வந்துட்டாருன்னு தோணுது . ... அவர் வாழ்நாளிலே இத்தனை மொறை பத்திரிகையாளரை சந்திச்சிருப்பாரா இல்லை அறிக்கை விட்டிருப்பாரா அப்படின்னு பாத்தா அப்படி ஒண்ணுத்தையும் காணோம் .... ஏன் இப்படி ஆயிட்டாரு ?


கல்யாணராமன் சு.
ஆக 08, 2025 12:35

எங்கேடாப்பா, வியாழக் கிழமை வரவேண்டிய காமெடியக் காணோமேன்னு பாத்தேன், வந்துடுச்சே


Ramesh Sargam
ஆக 08, 2025 12:22

எனக்கென்னமோ அப்பாவும், மகனும் ஏதோ நாடகம் ஆடுகிறார்கள்போல தோன்றுகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2025 12:18

வயதான காலத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார் அல்லது இவருக்கு கொட்டை எழுத்தில் எழுதி கொடுப்பவர்கள் இவரை தவறாக வழி நடத்துகிறார். இவரே இவரை தரம் தாழ்த்தி கொள்கிறார். இவருடைய மதிப்பு வெறும் 5000 ரூபாய் பழைய இன்னவோ கார் தானா? தினம் தினம் மீடியாக்களுக்கு தீனி கொடுக்கிறார் ஆனால் இவரது மகன் இது வரை மீடியா முன்பு இவரைப் பற்றி எதுவும் பேசாமல் பெருந்தன்மை காக்கிறார். ஜாதி அரசியல் செய்யும் கட்சி இவரது கட்சி. இது இவருக்கு தேவை தானா


Anbuselvan
ஆக 08, 2025 11:57

ஏன் இந்த சண்டை. பதவி வெறி ஆட்டி படைக்கிறது எனத்தான் தோன்றுகிறது. திரு அன்புமணி அவர்களுக்கே 56 வயது ஆகி விட்டது. அவரே இளைஞர் இல்லை. இவருக்கோ 80 ஆகி விட்டது. முதியவர் வகையில் இவர் வருகிறார். இளைஞர்கள்தான் பாரதத்தை தோளில் சுமக்க வேண்டும் அப்போதுதான் புதிய பாரதம் சக்தி வாய்ந்த பாரதம் உருகாவும். MP பதவிகளையும் MLA பதவிகளையும் கட்சி தலைவர்கள் பதவிகளையும் தக்க வைத்து கொண்டால் எங்கே உதிக்கும் புதிய பாரதம்


Rajarajan
ஆக 08, 2025 10:54

நீங்க தத்துவம் சொல்லி, கடைசியா ஒண்ணா சேர்ந்த்துப்பீங்க .உங்க பின்னால எல்லாம் போறவங்க தான் ஒரிஜினல் மக்கு பிளாஸ்திரிகள்.


புதிய வீடியோ