தகவல் கேட்டால் இ-மெயிலில் ஓ.டி.பி., அனுப்புவதா? ஆர்.டி.ஐ., சட்டத்தை நீர்க்கச் செய்ய திட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓ.டி.பி., நடைமுறையால் பயனாளர்கள் தங்கள் கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. அச்சட்டம் நீர்த்துப் போக அதிக வாய்ப்புள்ளது.தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) உதவி கோட்டச் செயலாளர் ராம்குமார் கூறியதாவது: ஆர்.டி.ஐ., சட்டம், அரசின் பல்வேறு துறைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்பட்டது.பணியாளர், பயிற்சி துறையின் கீழ் செயல்படும் இச்சட்டம் பிரதமர் மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் அரசிடம் தகவல் பெற விரும்புவோர் ரூ.10 கட்டணம் செலுத்தி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறைத் தலைமைக்கு கேள்விகளை அனுப்பினால் 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். இணையதளத்தில் பதிவு எண், அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து கேள்விகளின் நிலை, பதில் ஆகியவற்றை அறியலாம்.