காஷ்மீர் என்ற அழகிய நிலப்பரப்பை பகடை காயாக வைத்துவிட்டு, பாகிஸ்தான் இந்தியாவுடன், 78 ஆண்டுகளாக மோதி வருகிறது. இந்தியாவுடன் இதுவரை நான்கு போர்களை, பாகிஸ்தான் சந்தித்துவிட்டது. இதில், மூன்று போர்கள் காஷ்மீருக்காக மட்டும் நடந்தவை. காஷ்மீர் அல்லாத இன்னொரு போர், கிழக்கு பாகிஸ்தானில், இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, இந்தியா கொடுத்த ஆதரவு கரம்.கடந்த 1971ல் நடந்த இந்த போர், வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணம் ஆனது. பாகிஸ்தான், தான் வைத்திருத்த பெரும் நிலப்பரப்பை இழந்தது; நாடு இரண்டு துண்டானது. இந்தியாவுடன் இன்னொரு மோதல் ஏற்பட்டால், பாகிஸ்தான் நிலை இன்னும் மோசமாகி விடலாம். ஏற்கனவே, பாகிஸ்தானில் உள்நாட்டிலும் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள் பாகிஸ்தானை காவு வாங்க காத்திருக்கின்றன, கோபத்தில் ஈரான்
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தளமாகக் கொண்டு சன்னி பயங்கரவாதக் குழு 'ஜெய்ஷ் உல்- அட்ல்' இயங்கி வருகிறது. இந்த பயங்கரவாதிகள், பாக்., ராணுவ உதவியுடன் ஈரானிய படையினர் மீது, அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக, 2024 ஜனவரியில் பலுசிஸ்தான் மாகாணத்திற்குள், ஜெய்ஷ் உல்-அட்ல் மறைவிடங்களை குறிவைத்து, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.பாகிஸ்தான் மீது ஈரான் மிகவும் கோபத்தில் உள்ளது. 'எல்லையில் தாக்குதல் நடத்தும் சன்னி பயங்கரவாதிகளுக்கு பாக்., புகலிடம் அளித்து வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு தவறி வருகிறது' என, ஈரான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்படும் சூழ்நிலையில், பலுசிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம், பாகிஸ்தானுக்கு உள்ளது. தலிபான்கள் தயார்
அல்கொய்தா மற்றும் தலிபான்களுக்கு துவக்கத்தில் புகலிடம் தந்து உதவியது பாகிஸ்தான். ஒசாமா பின் லேடன், முல்லா ஒமர் மற்றும் பயங்கரவாத தலைவர்கள் பலரை அமெரிக்க படைகள், நாடு புகுந்து அதிரடியாக தீர்த்துக்கட்டியபின், பாகிஸ்தான் செல்வாக்கை இழந்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள தலிபான்களும், ஆப்கன் ஆட்சியாளர்களான தலிபான்களும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர்.ஆப்கானிஸ்தான் மறுமலர்ச்சிக்காகவும், கட்டமைப்புக்காகவும் இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது. அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்த பின்னரும், இந்தியாவுடன் துாதரக ரீதியிலான உறவுகள் பாதிக்கப்படவில்லை. காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், ஆப்கானிஸ்தானை இந்தியா அமைதியாக அணுகியுள்ளது.இந்த புத்திசாலித்தனமான ராஜதந்திர நடவடிக்கை, போரின்போது இந்தியாவுக்கு உதவிகரமாக இருக்கும். பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலை, தலிபான்களும் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான பேச்சு, பாக்., வயிற்றில் அமிலத்தை ஊற்றியுள்ளது. பாகிஸ்தான் கைபர் -பக்துன்க்வா மாகாணத்தில், தலிபான்கள் ஏற்கனவே குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அங்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
வசமாகுமா பி.ஓ.கே.,
காஷ்மீர் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையால், 78 ஆண்டுகளாக இந்தியாவை பகைத்து போரிட்டு வரும் பாகிஸ்தான், இந்த ஐந்தாவது போரில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கலாம். அன்று கிழக்கு பாகிஸ்தானை (வங்கதேசம்) கோட்டை விட்ட பாகிஸ்தான், இந்த போரில், பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் பி.ஓ.கே., (பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஆகியவற்றை, முறையே ஈரான், ஆப்கன் மற்றும் இந்தியாவுடன் ஒரே நேரத்தில் பறிகொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அடி போதாதா?
இந்தியா, பாகிஸ்தான் வரலாற்றில், 1971ம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தானை பிரித்து, உலக வரைபடத்தில் வங்கதேசம் என்ற ஒரு சுதந்திர நாடு உருவான ஆண்டு அது.1971 நவ., 23ல், பாக்., அதிபர் யாஹ்யா கான், பாகிஸ்தானியரை போருக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொண்டார். டிச., 3ல் பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவைத் தாக்கியது. அமிர்தசரஸ், ஆக்ரா உட்பட பல நகரங்களை குறிவைத்தது. ஆனால், இந்தியாவின் பதிலடி தாக்குதலில், பாக்., நிலைகுலைந்தது. 1971 டிச., 16ல், போர் முடிவுக்கு வந்தது. அதன் வலியை, பாகிஸ்தான் எப்போதும் உணரும். -நமது நிருபர்-