உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நெடுஞ்சாலைத்துறையுடன் ஊரக வளர்ச்சி இணைக்கப்படுமா! திமுக ஆட்சியின் தவறான கொள்கை முடிவால் தொடரும் அவஸ்தை

நெடுஞ்சாலைத்துறையுடன் ஊரக வளர்ச்சி இணைக்கப்படுமா! திமுக ஆட்சியின் தவறான கொள்கை முடிவால் தொடரும் அவஸ்தை

கோவை: தி.மு.க., ஆட்சியில், 1996ல் எடுத்த தவறான கொள்கை முடிவால், ஊரக வளர்ச்சி துறையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை செயல்படுத்த முறையான பொறியியல் கட்டமைப்பும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இல்லை என்கின்றனர், அத்துறையை சேர்ந்த பொறியியல் பிரிவினர். இத்துறையை பிரித்து நெடுஞ்சாலைத்துறையுடன் இணைத்து பொறியியல் பிரிவு உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் ஊரக பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 21க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பொறியியல் பிரிவு, 1960 முதல் 1996 வரை நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை என செயல்பட்டது. 1996ல் தி.மு.க., ஆட்சியில் ஊரக வளர்ச்சி துறை தனியாக பிரிக்கப்பட்டது.அப்போது, ஊரக பொறியியல் துறை என உருவாக்காமல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஒரு அங்கமாக பொறியியல் பிரிவை ஏற்படுத்தினர். அதில், உதவி பொறியாளர் முதல் கண்காணிப்பு பொறியாளர் வரை பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. உதவி பொறியாளர் 932, உதவி செயற்பொறியாளர் 205, செயற்பொறியாளர் 49, கண்காணிப்பு பொறியாளர் 3, தலைமை பொறியாளர் 2 பணியிடங்களே உள்ளன.நிர்வாக பிரிவில் இளநிலை உதவியாளர் முதல் கூடுதல் இயக்குனர் வரை 20 ஆயிரம் பணியிடங்கள் இருக்கின்றன. இத்துறையில் பொறியாளர்கள் அதிகாரமின்றி, நிர்வாகப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. திட்டங்களை செயல்படுத்த முறையான கட்டமைப்பு, அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இல்லாத அவல நிலை தொடர்கிறது.

கட்டமைப்பு இல்லை

ஊரக வளர்ச்சி துறை பொறியியல் பிரிவினர் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய அளவில், உதவி பொறியாளர்கள் மீதே அனைத்து பொறுப்புகளும் திணிக்கப்படுகிறது. திட்டங்களை செயல்படுத்த போதிய அவகாசம் தருவதில்லை. இலக்கு நிர்ணயித்து அவசரகதியில் செயல்படுத்த நிர்ப்பந்திக்கின்றனர். தேவையின் அடிப்படையில் இல்லாமல், இலக்கு அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. உட்கட்டமைப்பு திட்டங்களின் தோல்விக்கு உதவி பொறியாளர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது.போதிய பணியிடம், கட்டமைப்பு உருவாக்காததால், 2007ல் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது. 2009ல் பணியில் சேர்ந்தவர்களில், 50 சதவீதத்தினருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கு பணிக்காலம் முடியும் வரை பதவி உயர்வே கிடைக்காது. 2011, 2016, 2018ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அறவே வாய்ப்பு இல்லை.

அனுபவ அதிகாரிகள் இல்லை

குரூப் 4 தேர்வு மூலம் 10ம் வகுப்பு கல்வித்தகுதியில் சேரும் இளநிலை உதவியாளர், 15 ஆண்டுகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பதவி உயர்வு பெற முடியும். குரூப் 2 தேர்வெழுதி, பட்டம் முடித்து பணியில் சேரும் உதவியாளர், 12 ஆண்டுகளில் வட்டார வளர்ச்சி அலுவலராகிறார். குரூப் 1 தேர்வு மூலமாக உதவி இயக்குனராக சேருபவர், 15 ஆண்டுகளில் கூடுதல் இயக்குனராகிறார்.ஊராட்சி பகுதிகளில் பில்டிங் அப்ரூவல், லேஅவுட் அப்ரூவல் வழங்கும் அதிகாரம் ஊராட்சி செயலருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது பொறியியல் துறைக்கு சம்பந்தப்பட்டது. பொறியாளர்கள் செய்ய வேண்டிய பணி. ஆனால், கிராம ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.உதவி பொறியாளர் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டிலும், உதவி செயற்பொறியாளர் உதவி திட்ட அலுவலர் கட்டுப்பாட்டிலும், செயற்பொறியாளர் திட்ட இயக்குனர் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பு பொறியாளர் கூடுதல் இயக்குனர் கட்டுப்பாட்டிலும், தலைமை பொறியாளர் கூடுதல் இயக்குனர், இயக்குனர் கட்டுப்பாட்டிலும் செயல்படுகின்றனர். இத்துறையில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் தலைமை பொறுப்பில் இல்லை.

நிதி மிச்சமாகும்

மற்ற மாநிலங்களில் ஊரக பொறியியல் துறை தனித்துறையாகவும், ஊராட்சிகள் துறை தனித்துறையாகவும் செயல்படுகின்றன. தமிழகத்திலும் இரு துறையாக பிரிக்க வேண்டும். அதில், ஊரக பொறியியல் துறையை நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்கலாம். ஊராட்சிகள் துறையை மகளிர் நலன் மற்றும் சமூக மேம்பாட்டு துறையுடன் இணைத்து, ஊராட்சிகள், மகளிர் நலன் மற்றும் சமூக மேம்பாட்டு துறை என புதிய சேவை துறையை உருவாக்க வேண்டும். சரியான முறையில் துறைகளை மாற்றி அமைத்தால், அரசுக்கு பெரிய அளவில் நிதி மிச்சமாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை