உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?

சென்னை: மதுரையில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, ஒரு மணி நேரம் காத்திருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தனித்தனி அணிகளாக போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், வரும் சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளன. ஏழு மாதங்களாகியும் கூட்டணிக்குள் எந்த கட்சியும் இதுவரை வந்து சேரவில்லை. லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இருந்த தினகரனின் அ.ம.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உறவை முறித்துக் கொண்டனர். மேலும், பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க., தற்போது ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என இரு பிரிவாக உள்ளது. இரு பிரிவுமே, இதுவரை கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. இதுபோல, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இருந்த தே.மு.தி.க.,வும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. பீஹார் போலவே, தமிழகத்திலும் வியூகம் அமைத்து, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வலிமையாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார். அதற்கான பணிகளை விரைவில் துவங்குவார் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர். இதற்கிடையே, பீஹார் வெற்றிக்கு பின், அ.தி.மு.க., முகாம் சுறுசுறுப்படைந்துள்ளது. நேற்று சேலம் சென்ற த.மா.கா., தலைவர் வாசன், அங்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த வாசன், ''பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பின், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுப்பெற்றுள்ளது. பழனிசாமியுடன் அரசியல் பேசினேன்,'' என்றார். இந்த சூழலில், மதுர ை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தே.மு.தி.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது அங்கு வந்த, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான உதயகுமார், ஒரு மணி நேரம் காத்திருந்து, பிரேமலதாவை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பின் பேட்டியளித்த உதயகுமார், ''பிரேமலதாவின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே அவரை சந்தித்தேன். அ.தி.மு.க., -- தே.மு.தி.க., கூட்டணி குறித்து பழனிசாமி தான் முடிவெடுப்பார்,'' என்றார். ஆனாலும், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பழனிசாமி சார்பில் பிரேமலதாவுடன், உதயகுமார் பேசியதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை